பாதிரியாருக்காக வரிந்துகட்டிய கேரள எம்.எல்.ஏ! - கன்னியாஸ்திரிக்காகக் களமிறங்கிய நடிகைகள் | Kerala MLA George controversy speech about affected Nun

வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (12/09/2018)

கடைசி தொடர்பு:13:18 (12/09/2018)

பாதிரியாருக்காக வரிந்துகட்டிய கேரள எம்.எல்.ஏ! - கன்னியாஸ்திரிக்காகக் களமிறங்கிய நடிகைகள்

`தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், வாடிகன் திருச்சபைக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

பி.சி.ஜார்ஜ்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் பிராங்கோ முளக்கல் மீது கேரள மாநிலம் கோட்டயம் சீரோ மலபார் சபையைச் சேர்ந்த 46 வயதுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக திருச்சபையில் புகார் தெரிவித்தார். அவரது புகார் மனுவில், `இரண்டு ஆண்டுகளாக 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியிருந்தார். இதுதொடர்பாக, ஆர்ச் பிஷப் கர்த்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஆனால், `இந்தியத் திருச்சபைகளில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் வாடிகன் திருச்சபை தலையிட வேண்டும்' எனக் கூறி வாடிகன் திருச்சபைக்குக் கடிதம் எழுதியுள்ளார் கன்னியாஸ்திரி. இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி உட்பட ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் நான்கு நாள்களைக் கடந்துவிட்டது. ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகக் கேரள சுயேச்சை எம்.எல்.ஏ-வின் பேச்சு அமைந்துவிட்டது. 

பிராங்கோ முளக்கல்

கேரளாவின் பூஜாரி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ-வான பி.சி.ஜார்ஜ் பேசும்போது, `` இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஏன் முன்னாடியே புகார் கூறவில்லை" எனக் கூறி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து எம்.எல்.ஏ-வுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மகளிர் ஆணையம். ஜார்ஜின் பேச்சுக்கு நடிகை பார்வதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு எதிராக ட்விட்டரில்  #VaayaMoodal (வாயை மூடுங்கள்) என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்து உள்ளனர். இந்த ஹேஸ்டேக் தற்போது வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க