வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (12/09/2018)

கடைசி தொடர்பு:16:30 (12/09/2018)

`சீனா அளவுக்கு உயர வேண்டியது அவசியம்!' - விமானப்படை தளபதியின் புது விளக்கம்

ராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதாக விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார். 

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேசும் விமானப் படை தளபதி

ரஃபேல் போர் விமானம் தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரும் ரஃபேல் போர் ஒப்பந்த முறைகேட்டைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க-வை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், `ராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கிலேயேதான் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது' என விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார். 

டெல்லியில் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரேந்தர் சிங் தனோவா, `எதிரிகளின் நோக்கங்கள் ஒரே இரவிலும்கூட மாறும். அத்தகைய ஒரு நிகழ்வுக்கு இந்தியா எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உலகில் வேறு எந்த நாடுகளும் எதிர்கொள்ளாத அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. நம் அண்டை நாடான சீனா அமைதியாக உட்கார்ந்துகொண்டிருக்கவில்லை. சீனா போன்ற நாடுகள் வேகமாக, அதன் விமானப்படைகளை நவீனப்படுத்தி வருகிறது. அவர்களுடன் ஒப்பிடவேண்டும் என்றால் நமது விமானப்படையின் நிலையை உயர்த்த வேண்டியது அவசியம்' எனச் சுட்டிக்காட்டிய அவர், `ராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கிலேயேதான் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.