பீமா கோரேகான் வழக்கு!- கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக் காவல் நீட்டிப்பு | 5 activists will remain under house arrest till September 17 in Bhima Koregaon violence case

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (12/09/2018)

கடைசி தொடர்பு:18:09 (12/09/2018)

பீமா கோரேகான் வழக்கு!- கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக் காவல் நீட்டிப்பு

பீமா கோரேகான் வன்முறை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவல் செப்டம்பர் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கோரேகான்

மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகான் விவகாரத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் வழக்கறிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், குடிமையுரிமை செயற்பாட்டாளர்களான கௌதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ் ஆகியோர் ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

முன்னதாக நடைபெற்ற இந்த வழக்கில் மாவோயிஸ்டுகளுக்கும் இடதுசாரி ஆர்வலர்களுக்கும் தொடர்பு உள்ளது. அதற்காக முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததன் பேரிலேயே அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர் என மகாராஷ்டிரா காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆர்வலர்களின் வீட்டுக்காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.