வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (12/09/2018)

கடைசி தொடர்பு:18:30 (12/09/2018)

கேரளா உட்பட 7 மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! அதிர்ச்சியில் ஓடிவந்த இளைஞர் உயிரிழப்பு

வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் கேரளாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரளாவில் நிலநடுக்கம்

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா, கடந்த சில மாதங்களாகவே இயற்கைச் சீற்றத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஒகி புயலின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த கேரளாவை கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளக்காடாக்கியது. எங்கு பார்த்தாலும் தண்ணீர், நிலச்சரிவால் வீடுகள் இடிந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் என கேரளாவே கண்ணீரில் மிதந்தது. அந்தப் பாதிப்பிலிருந்து மலையாள மக்கள் மீண்டெழுந்த நிலையில், எலிக்காய்ச்சல் நோய் அச்சத்தை உருவாக்கியது. 

தற்போது அந்த மாநிலத்தின் சில மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். அஸ்ஸாம், பீகார், மேகாலயா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவின் ஷில்லாங் நகரில் 5.5 எனப் பாதிவான நிலநடுக்கம், பிற மாநிலங்களில் 3.5 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்தது. கேரளாவிலும் 3.5 என்கிற அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. 

பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இந்த நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்தனர். 5 முதல் 10 விநாடிகள் மட்டுமே நீடித்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தார்கள். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறிய சத்தம் கேட்டதாகவும் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். நிலநடுக்கம் காரணமாக சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்தன. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

அஸ்ஸாம் உள்ளிட்ட 6 வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் 15 முதல் 20 விநாடி நேரத்துக்கு நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் வீடுகளிலிருந்து அலறியடித்தபடியே பொதுமக்கள் வீதிக்கு ஓடிவந்தார்கள். மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தபோது சாம்ராட் தாஸ் என்ற 22 வயது இளைஞர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். பிற இடங்களில் உயிரிழப்பு அல்லது பொருள் இழப்பு குறித்து தகவல் எதுவும் இல்லை.