`சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பயன்பட்ட சிறுத்தையின் சிறுநீர்!’ - ராணுவ வீரர்களின் சமயோசிதம் | How leopard urine helped Indian Army in carrying out surgical strike?

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (12/09/2018)

கடைசி தொடர்பு:19:53 (12/09/2018)

`சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பயன்பட்ட சிறுத்தையின் சிறுநீர்!’ - ராணுவ வீரர்களின் சமயோசிதம்

 ர்ஜிக்கல் ஸ்டிரைக் என்னும் திடீர் தாக்குதலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து, இந்திய ராணுவ வீரர்கள் நடத்தி ஏறக்குறைய 2 வருடங்கள் ஆகிவிட்டாலும், அத்தாக்குதல் தொடர்பான பல்வேறு தகவல்கள் இன்னும் ரகசியமாவே வைக்கப்பட்டுள்ளன. அப்படி ரகசியமாக வைக்கப்பட்ட தகவல்களில் ஒன்றுதான், தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய வீரர்கள், தங்களுடன் சிறுத்தையின் சிறு நீரையும் கொண்டு சென்றனர் என்ற தகவல். 

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பார முல்லா மாவட்டம் உரி ராணுவ முகாம் மீது கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அதிகாலை 4  பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய ராணுவத்தினர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத் துறையினருக்கு உறுதியான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 28 -ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் ‘துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) என்ற ரகசிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினர். பாகிஸ்தான் முப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவி ஹெலிகாப்டர்கள் மூலம் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த பாராசூட் வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 7 இடங்களில் தரையிறங்கினர்.

எல்லையிலிருந்து 500 மீட்டர் முதல் 3 கி.மீ. தொலைவு வரை முன்னேறிய இந்திய வீரர்கள், 7 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 7 முகாம்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. சுமார் 4 மணி நேர சண்டைக்குப் பிறகு 29-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு இந்தத் தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இதில், 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இந்த நிலையில், இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்  நடவடிக்கையின் முழுமையான விவரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. தாக்குதல் குறித்த பல்வேறு தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. அப்படியான ஒரு தகவலை ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா ராணுவ முகாமின் முன்னாள் கமாண்டரான லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.ஆர். நிம்போர்கர் வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்துப் பேசிய அவர், ``பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய வீரர்கள், தங்களுடன் ஆயுதங்களை மட்டும் அல்லாது, சிறுத்தையின் சிறு நீரையும் எடுத்துச் சென்றனர். தாக்குதல் நடத்தச் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் நாய்கள் இருக்கும் என்பதால், அவை குரைத்து எதிரிகளை உஷார்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, நாய்களுக்கு மிகவும் கிலியை ஏற்படுத்தக்கூடிய சிறுத்தையின் சிறுநீரையும் எடுத்துச் சென்றனர். சிறுத்தை என்றால் நாய்களுக்கு மிகவும் பயம். சிறுத்தை அருகில் இல்லாவிட்டாலும், அது சிறுநீர் கழித்துவிட்டுச் சென்ற இடத்தின் அருகே வந்தாலே நாய்கள் ஓட்டம் எடுத்துவிடும். எனவேதான் நாய்களுக்கு சிறுத்தை பயத்தைக் காட்டி, அவற்றை ஓடச் செய்வதற்காக அதனை நாங்கள் எங்களுடன் எடுத்துச் சென்றோம். எதிர்பார்த்தபடியே நாய்கள் எங்கள் பக்கமே வரவில்லை. வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தி முடித்துவிட்டுத் திரும்பினோம்" என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க