பாலியல் புகார் எதிரொலி! - ஜலந்தர் பிஷப் பிராங்கோவுக்குக் கேரள போலீஸார் சம்மன்

கேரளா கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில், வருகின்ற 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, பிஷப் பிராங்கோவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கன்னியாஸ்திரி வழக்கு

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரைச் சேர்ந்த பிஷப், பிராங்கோ என்பவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். கேரளாவில் உள்ள கான்வென்டில் வைத்து, ஒப்புதலின்றி தன்னை 2014-16ம்  ஆண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகார் அளித்தார். இது கேரளா மட்டுமல்லாது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரையடுத்து, திருவனந்தபுரம் போலீஸார் ஜலந்தர் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்தப் புகார் குறித்து பிஷப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஜலந்தர் பிஷப் மீது, நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த, அம்மாநில அமைச்சர் ஜெயராஜன், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப்பேசிய, எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி விஜய் ஷக்காரே,``இந்த வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, வரும் 19-ம் தேதி ஆஜராகக் கோரி, பிஷப் பிராங்கோவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!