வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (12/09/2018)

கடைசி தொடர்பு:17:36 (13/09/2018)

`தனிப்பட்ட முறையில் விஜய் மல்லையாவைச் சந்திக்கவில்லை!’ - குற்றச்சாட்டை மறுக்கும் அருண் ஜெட்லி

விஜய் மல்லையா தன்னை சந்தித்ததாகப் பேட்டியளித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.

அருண் ஜெட்லி விளக்கம்

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அவரை இந்தியா கொண்டு வர லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, ``வெளிநாடு செல்லும் முன்னர் நிதியமைச்சரைச் சந்தித்து, எனது கடன்களை அடைப்பதாகக் கூறினேன். இதுவே உண்மை’’ என்று தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அமைச்சர்  அருண் ஜெட்லி தனது  ட்விட்டரில்,``என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்குப் புறம்பானது.

ட்விட்டர்

 

2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், நாடாளுமன்றத்தில் அவரைச் சந்தித்ததுண்டு. பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு நாடாளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறுத்தினேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.