இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்குபெற்ற பஞ்சாப் மாநில அமைச்சர் சித்துவுக்கு சிறைத்தண்டனை? | Supreme Court re-examine sentence awarded to former cricketer Sidhu road rage case

வெளியிடப்பட்ட நேரம்: 06:36 (13/09/2018)

கடைசி தொடர்பு:12:10 (13/09/2018)

இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்குபெற்ற பஞ்சாப் மாநில அமைச்சர் சித்துவுக்கு சிறைத்தண்டனை?

சித்து, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பஞ்சாப் சுற்றுலாத்துறை அமைச்சராகியுள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, பழைய வழக்கின் அடிப்படையில் சிறைத்தண்டனை பெற வாய்ப்புள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

சித்து

1988-ம் ஆண்டு நவ்ஜோத் சித்தும் அவரின் நண்பர் ரூபிந்தர் சாந்தும் காரில் பயணித்தபோது, சாலையில் பயணித்த குர்னாம் சிங்குடன் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கைகலப்பில் குர்னாம் சிங் மரணமடைந்திருக்கிறார். காவல்துறை வழக்கு பதிவுசெய்து இரண்டு பேரையும் கைது செய்துள்ளது. 1999-ம் ஆண்டு, நீதிமன்றம் குர்னாம் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார் என இரண்டு பேரையும் விடுவித்தது. இதை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் சித்துக்கும் அவரின் நண்பருக்கும் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் மூன்றாண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. சித்து, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பஞ்சாப் சுற்றுலாத்துறை அமைச்சராகியுள்ளார்.  இந்த நிலையில் குர்னாம் சிங் குடும்பத்தினர் சித்துவின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். 

பாகிஸ்தான்

கடந்த மாதத்தில் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் கிரிக்கெட்டர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் சித்து கலந்துகொண்டது சர்ச்சையைக் கிளம்பியது. இந்த நிலையில், மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று குர்னாம் சிங் குடும்பத்தினரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மீண்டும் வழக்கு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மீண்டும் வழக்கு விசாரணையில் சித்துக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


[X] Close

[X] Close