வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (13/09/2018)

கடைசி தொடர்பு:10:33 (13/09/2018)

`சுதந்திரமான விசாரணை தேவை’ - அருண் ஜெட்லியைக் குறிவைக்கும் ராகுல் காந்தி

அருண் ஜெட்லியைச் சந்தித்ததாக விஜய் மல்லையா தெரிவித்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அவரை இந்தியா கொண்டு வர லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, ``வெளிநாடு செல்லும் முன்னர் நிதியமைச்சரைச் சந்தித்து, எனது கடன்களை அடைப்பதாகக் கூறினேன். இதுவே உண்மை’’ என்று தெரிவித்தார்.

விஜய் மல்லையா பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அருண் ஜெட்லிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கடும் விமர்சனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்த ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், 'லண்டனில் விஜய் மல்லையா தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது தொடர்பாக, உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். விசாரணை நடைபெறும்போது, நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.