`விநாயகர் சதுர்த்தியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழுங்கள்!’ - தலைவர்கள் வாழ்த்து

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகையாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி பெரு விழா செப்டம்பர் 13-ம் தேதி, அதாவது இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த விழாவை முன்னிட்டு நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்கள், மக்களுக்குத் தங்களின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ‘அனைத்து மக்களுக்கும் விநாயகர் சதுர்த்தி புனித நாள் நல்வாழ்த்துகள்’ எனப் பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

விநாயகர் சதுர்த்தி விழா வட மாநிலங்களில்தான் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, அதைக் குறிப்பிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இன்று விநாயகர் சதுர்த்தி விழா. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, மகாராஷ்ட்ராவில் வாழும் சகோதர சகோதரிகளுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

‘முழு முதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்’ எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘கணேஷ் சதுர்த்தி புனித நாளான இன்று அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். கணபதி பாப்பா மோரியா’ எனப் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!