வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (13/09/2018)

கடைசி தொடர்பு:11:34 (13/09/2018)

வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய கேரள பா.ஜ.க எம்.பி கூறும் வித்தியாசமான யோசனை!

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, கோயில் சொத்துகளைப் பயன்படுத்தி சீரமைக்கலாம் எனக் கேரள மாநில பா.ஜ.க எம்.பி உதித் ராஜ் யோசனை தெரிவித்திருக்கிறார். 

கேரளா வெள்ளம்

கேரள பா.ஜ.க எம்.பி உதித் ராஜ்கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை கேரள மாநிலத்தைப் புரட்டிப் போட்டது. கனமழையால் காரணமாக மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. குறிப்பாக ஆசியாவின் மிகப்பெரிய ஆர்ச் அணைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இடுக்கி அணையின் 5 மதகுகளும் கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாகத் திறக்கப்பட்டன. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  

வெள்ள பாதிப்புகளால் ரூ.20,000 கோடிக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு மதிப்பிட்டது. முதற்கட்ட நிதியாக மத்திய அரசிடமிருந்து ரூ.2,000 கோடியைக் கேரளா கேட்டது. அதேநேரம், முதற்கட்டமாக ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. அதேபோல், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு நிதி உதவி குவிந்தது. இருப்பினும், வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள அம்மாநிலத்துக்கு நீண்டகாலம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்தநிலையில், வெள்ள பாதிப்பிலிருந்து மீள கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான கோயில்களின் சொத்துகளைப் பயன்படுத்தலாம் என அம்மாநில பா.ஜ.க எம்.பி உதித் ராஜ் யோசனை கூறியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ``மாநிலத்தில் உள்ள பத்மநாப சுவாமி, சபரிமலை மற்றும் குருவாயூர் ஆகிய கோயில்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியைத் தாண்டும். மொத்த இழப்பான ரூ.21,000 கோடியைவிட இந்த மதிப்பு அதிகம். மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி அழுதுகொண்டும் இறந்துகொண்டும் இருக்கும்போது, இந்தச் சொத்துகளால் என்ன பயன்’’ என்று அவர் கூறியிருக்கிறார்.