`100 பேருடன் குறுக்கு வழியில் பயணம்; பிரேக் பெயிலியர்!’ - தெலங்கானாவை உலுக்கிய கோர விபத்தின் பின்னணி

இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்குக் கடந்த மாதம் சிறந்த ஓட்டுநருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

விபத்து

தெலங்கானா மாநிலம் குண்டகட்டா மலைப்பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து நேற்று முன் தினம் காலை 11 மணியளவில் ஒரு அரசுப் பேருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாகப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைவாகச் சம்பவ இடத்துக்குச் சென்று துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்தக் கோர விபத்தில் இதுவரை 7 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், விபத்து குறித்து தெலங்கானா அதிகாரிகள் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். 58 இருக்கைகள் கொண்ட பேருந்தில் 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் பேருந்தை இயக்கியது விபத்துக்கான காரணம் என்றும் பேருந்தின் எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக ஓட்டுநர் குறுக்கு வழியில் பேருந்தை இயக்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்துக்குள்ளான பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஸ்ரீனிவாசன் கடந்த மாதம் மாநில அரசால் சிறந்த ஓட்டுநருக்கான விருது வாங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த விபத்து சம்பவத்தை அடுத்து தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் டிப்போ மேலாளர் ஹனுமந்த ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் பிரேக் பிடிக்காததே விபத்துக்கான முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!