`சிறந்த மனிதநேயர் விருது!’ - சென்னை மருத்துவரைக் கௌரவித்த பாகிஸ்தான் பல்மருத்துவர் சங்கம்

சிறந்த மனித நேயருக்கான விருதைத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாலாஜிக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம். 

மருத்துவர்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைகளிலும் அவ்வப்போது சில நல்ல விஷயங்களும் நடைபெறுகிறது. சென்னையைச் சேர்ந்த முகச்சீரமைப்பு மருத்துவரான பாலாஜிக்கு பாகிஸ்தானின் சிறந்த மனித நேயருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த விருதை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை மருத்துவர் பாலாஜி பெற்றுள்ளார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா பசிபிக் டெண்டல் ஃபெடரேஷன் (Asia Pacific Dental Federation) சார்பில் பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கூட்டத்தில் சுமார் 1,000 சிறந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர். அதில், தமிழக மருத்துவர் பாலாஜி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையும் ஆற்றினார். அதன்பின்னர், 2010-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் உள்ள முகம் மற்றும் பல் குறைபாடுள்ள சிறுவர்களை அந்நாட்டு பல் மருத்துவர்கள் சங்கம் பேராசிரியர் பாலாஜியிடம் சிகிச்சை பெறுவதற்காக சென்னைக்கு அனுப்பி வருகிறது. அதில், ஏழை மற்றும் மிகவும் பின் தங்கிய சிறுவர்களுக்கு பாலாஜி, இலவசமாகச் சிகிச்சையளித்து வருகிறார். இதைக் கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் இவருக்குச் சிறந்த மனித நேயர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!