வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (13/09/2018)

கடைசி தொடர்பு:20:00 (13/09/2018)

`கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாகக் கண்திறக்க வேண்டும்' - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் மஞ்சு வாரியர்!

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது கைகோத்து போராட்டத்தில் கலந்துகொள்கிறேன். குற்றம் செய்த பிஷப் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையாள நடிகை மஞ்சு வாரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

மஞ்சு வாரியர்

ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளக்கல் என்பவர் கேரளாவில் உள்ள கான்வென்டில் வைத்து தன்னை 2014 - 16-ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரையடுத்து, திருவனந்தபுரம் போலீஸார் ஜலந்தர் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்தப் புகார் குறித்து பிஷப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஜலந்தர் பிஷப் மீது, நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் கொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு, வரும் 19-ம் தேதி ஆஜராகக் கோரி, பிஷப் பிராங்கோவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ன்னியாஸ்திரி

இந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது கைகோத்து போராட்டத்தில் கலந்துகொள்கிறேன். குற்றம் செய்த பிஷப் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் யாரும் பிஷப்புக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். அப்படி யாராவது பிஷப்புக்கு ஆதரவு அளித்தால் அவர்கள் 30 வெள்ளிக் காசுக்காகக் கிறிஸ்துவை காட்டிக்கொடுத்த யூதாசுக்கு ஒப்பாவார்கள். கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக அரசு கண்திறக்க வேண்டும்" என்றார்.