`வாழ்வாதாரம் பாதிப்பு' - கேரள அரசு அறிவிப்புக்கு எதிராகப் போராட்ட களத்தில் மேஜிக் கலைஞர்கள்!

ழை பாதிப்பு காரணமாகக் கேரள மாநிலத்தில் ஓர் ஆண்டுக்குக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது எனக் கேரள அரசு தடை விதித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மேஜிக் கலைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மனு மாங்கொம்பு

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கன மழை காரணமாக மாநிலம் முழுவதும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி 483 பேர் இறந்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள பொருள்களும் கட்டடங்களும் சேதம் அடைந்தன. கேரளத்தை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய நிதி திரட்டும் முயற்சியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்ட உடனே கேரளத்தில் பாரம்பர்யமாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கேரள மாநிலத்தில் ஓர் ஆண்டுக்குக் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பால் மேடை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டைச் சேர்ந்த மேஜிக் கலைஞர்கள் இன்று போராட்டம் நடத்தினர். மழையால் பாதித்த மைக், லைட் செட்டுகள், இசைக்கருவிகளைக் கொண்டுவந்தவர்கள் தங்களைச் சங்கிலியால் பிணைத்து போராட்டம் நடத்தினர்.

கலைஞர்கள் போராட்டம்

868 முறை நெருப்பைக் கடந்துசென்று மேஜிக் நடத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மேஜிக் கலைஞர் மனு மாங்கொம்பு கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளாக மேஜிக் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். மழையில் பாதித்த மக்களைக் காப்பாற்ற படகில் நான் சென்றுவிட்டேன். சுமார் 67-க்கும் அதிகமானோரை வெள்ளத்தில் இருந்து மீட்டேன். ஆனால், நான் மேஜிக் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்து 26 லட்சம் மதிப்புள்ள கருவிகள் மழையில் மூழ்கி நாசமாகிவிட்டன. ஏற்கெனவே ஓணம் பண்டிகையில் 7 நாள்கள் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தமுடியவில்லை. ஒரு ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் நாங்கள் மட்டுமல்ல மேடை நாடகம், இசைக் கச்சேரி நடத்து கலைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எங்களுக்கு வேறு வேலை தெரியாது. மழைக்காலத்தில் முகாமில் கொடுத்த உணவைச் சாப்பிட்டோம். இப்போது நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறோம். அரசு எங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!