வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (13/09/2018)

கடைசி தொடர்பு:20:16 (13/09/2018)

அரசின் செயல்பாடுகளைத் தோலுரிக்கும் ஆனந்த் பட்வர்த்தனின் Reason... இந்தியாவில் வெளியாகுமா?!

எப்பொழுதும் இந்திய அரசியலின் மிக முக்கியமான விஷயங்களை ஆவணப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தன் இந்த முறை எடுத்துள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியைப் பற்றி...

ஒவ்வோர் ஆண்டும் டொரொன்டோவில் நடைபெறும் திரைப்படத் திருவிழா, இந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கி 16 வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய `Reason' என்ற படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. எப்போதும் இந்திய அரசியலின் மிக முக்கியமான விஷயங்களை ஆவணப்படுத்தும் இவர், இந்த முறை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியைப் பற்றி எடுத்துள்ளார்.

ஆங்கிலத்தில் `Reason' என்றும், இந்தியில் `Vivek' என்றும் பெயரிடப்பட்ட இந்த ஆவணப்படம், எட்டு பாகங்கள் கொண்டது. நான்கு மணி நேரம் 20 நிமிடம்  ஓடக்கூடியது. பகுத்தறிவுவாதிகள் படுகொலை செய்யப்படுவது, அரசாங்கக் கொள்கைகளைக் கேள்வி கேட்கும் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல், சனாதன் சன்ஷ்டா, அபினவ் பாரத் போன்ற நிழல் இந்துத்துவ இயக்கங்களின் வருகை, அதிதீவிர ஆனந்த் பட்வர்த்தன்தேசியவாதம், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான தாக்குதல், சரித்திரத்தை மாற்றி எழுத மேற்கொள்ளும் முயற்சிகள், தீவிர இந்து நம்பிக்கைகளை பொதுவான தளங்களில் முன்னிலைப்படுத்துவது, இந்தியாவையே ஓர் இந்து நாடாக மாற்ற அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்படும் முயற்சிகள், போராட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் என அனைத்தையும் நாமே நேரில் சம்பந்தப்பட்டிருப்பதுபோன்று பேட்டிகள், தொலைக்காட்சித் துணுக்குகள், யூ டியூப் வீடியோக்கள், போராட்டங்களின் வீடியோக்கள், பொதுக்கூட்டப் பேச்சுகள் போன்றவைகொண்டு ஆவணப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

2013 ஆகஸ்ட் 20-ல் மூடநம்பிக்கைக்கு எதிரான சமூகச் செயற்பாட்டாளரும், பகுத்தறிவுவாதியுமான நரேந்திர தபோல்கரின் கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த் பன்சார், 2015 நவம்பர் 20-ல் கொலை செய்யப்படுகிறார். சாதீய அதிகாரத்தையும் சரித்திர நாயகர்களின் வேறுவிதமான சித்திரிப்பையும், சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு ஆன்மிகத் தீர்வுகள் சரிவராது என்பதையும், சிறுபான்மையினருக்கு எதிரான நம்பிக்கைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டியதால் தொடர்ந்து இந்துத்துவக் கட்டமைப்பில் முள்ளாகக் குத்திக்கொண்டியிருந்தார்கள் இவர்கள் இருவரும். தொடர்ந்து பேசியும் எழுதியும் மக்களோடு இடையுறாது வேலை செய்தபடியும் இருந்தார்கள் என்பதைப் பதிவுசெய்துள்ளார்.

தபோல்கர், பன்சாரே, கல்வியாளர் கல்பர்கி, ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் என இவர்கள் எல்லாம் ஏன் சாக நேர்ந்தது? இந்துத்துவா தனது கரங்களைச் சமூகத்தின் எல்லா நிலைகளிலும், ஏன் அரசாங்கத்தின் உச்சநிலைகளிலுமே பரப்பிவிட்டது என வாதிடுகிறார் பட்வர்த்தன். நமது மதச்சார்பற்ற குடியரசை ஒரு குறுகிய இந்து தேசமாக மாற்ற நடக்கும் முயற்சிகள்தான் நமது நம்பிக்கைகளுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறார். ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம் இவற்றை எல்லாம் நம்பும் எல்லோருக்கும் இப்படி ஒரு நம்பிக்கை அதிகாரத்துக்கு வருவது என்பது ஆபத்துதான் என்று தனது இயக்குநர் குறிப்பில் தெரிவிக்கிறார்.

ஆனந்த பட்வர்த்தன் - reason

சனாதன தர்மத்தின் மீதான விரிவுரை, மராட்டிய வீரர் சிவாஜியை ஓர் இந்து ஆளுமையாக மாற்றி முன்னிறுத்துவதான முயற்சி, தீவிரத்தன்மையோடு இயங்கும் சனாதன் சன்ஷ்டா, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி இவர்களின் கொலையோடு இவர்களின் உறுப்பினர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் தொடர்பு ஆகியவற்றின் மூலம் இந்துத்துவப் போராளிகளைப் பற்றிய ஓர் எச்சரிக்கை மணியை இதன் மூலம் ஒலிக்கச் செய்திருக்கிறார்.

தலித்துகளுக்கான நில உரிமைகள் குஜராத்தில் முன்னெடுக்கப்படும் அதேநேரம், குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் பசு ஆதரவாளர்கள் தலித்துகளையும் இஸ்லாமியர்களையும் தாக்குகிறார்கள். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் ரொஹித் வெமுலாவின் தற்கொலை மூலம் தலித்துகளின் உரிமைக்கோரலை அவமதித்து அவர்களைக் கொடியவர்களாகச் சித்திரிக்கும் முயற்சிகளையும், பாரதிய ஜனதாவின் மாணவர் அணியான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்தின் திட்டங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார். தேசிய செய்தி நிறுவனங்கள் ஜே.என்.யூ போன்ற பல பல்கலைக்கழக வளாகங்களில் இந்த மாணவர் அமைப்பு மாணவர்களை தேசபக்தர்கள், தேசத்துரோகிகள் என்று இரு அணிகளாகப் பிரிக்க முயல்கிறது.

மும்பையில் 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களையும் ஆய்கிறது பட்வர்த்தனின் கேமரா. லஷ்கரி தொய்பாவின் தீவிரத் தாக்குதலுக்குப் பலியானவர்களில் ஹேமந்த் கர்கரேவும் ஒருவர். இவர் மகாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர். இந்து தீவிரவாதிகளுக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் இடையேயான தொடர்பு, இந்து தீவிரவாத அமைப்பான `ஆகன்ட் பாரத்' நடத்தியதாகச் சொல்லப்படும் 2006 மெலகான் குண்டுவெடிப்புகளை ஆய்வுசெய்வது என்று செயல்பட்டு வந்தார் கர்கரே. முழுக்க நம்ப முடியாவிட்டாலும் கர்கரேவின் இறப்புக்கு தாக்குதல் மட்டுமே காரணமா என்று கேள்வி எழுப்ப முயல்கிறது இந்த ஆவணப்படம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உள்ள எல்லோரையும் அனுசரிக்கும் பண்பை எதிர்த்திருக்கிறார் வீர சாவர்க்கர். இதை அவரது தேசபக்த உணர்வாக நம்பவைப்பதன் மூலம், தீவிர இந்துத்துவவாதியான வீர சாவர்க்கரை ஒரு தேசிய ஆளுமையாக முன்னிறுத்த நடைபெறும் முயற்சிகளைப் பற்றியும் பேசுகிறது இந்த ஆவணப்படம்.

Reason

1992-ல் இந்துத்துவாவின் தேசிய வெளித்தோற்றத்தைப் பற்றியும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றியும் வெளிவந்த `ராம் கி நாம்' படம், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவாவின் ஆணாதிக்கரீதியான கருத்துகள் ஆகியவற்றைப் பற்றி 1995-ல் வெளிவந்த ஃபாதர், சன் அண்ட் ஹோலி வாட்டர் ஆகியவற்றின் கருத்துகளை மீண்டும் பிரதிபலித்திருக்கிறார் பட்வர்த்தன். 2012-ம் ஆண்டில் தனது படமான `ஜெய் பீம் காம்ரேட்' படத்தில் தலித்துகளின் அடக்குமுறைக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பு, ஆதிக்கச் சாதியினரின் பதில் தாக்குதல் போன்றவற்றைப் பதிவுசெய்திருந்தார் பட்வர்த்தன்.

இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய தனது 1971 படமான `வேவ்ஸ் ஆஃப் ரெவல்யூஷன்' தொடங்கி தனது எல்லா படங்களிலுமே பட்வர்த்தன் பதில்களைத் தேடியபடி தெருக்களில் அலைந்து திரிகிறார். அநீதியால் பாதிக்கப்பட்ட, பொதுவான கட்டமைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளானவர்களுடனான உரையாடல்களை குற்றங்கள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிகழ்த்துகிறார். அவர்களிடம் கொள்கை விளக்கங்களைக் கேட்கிறார், எதிர் தரப்பின் கேள்விகளை முன்வைக்கிறார்.

ஏபிவிபி மாணவர் அமைப்புகளிடமும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடமும் வீர சாவர்க்கருக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் உண்டான தொடர்பு, காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான தொடர்பு ஆகியவை குறித்த கேள்விகளை வைக்கிறார். சனாதன் சன்ஷ்டாவின் தலைமையகமான கோவாவில் படம்பிடிக்கப்பட்ட பகுதிகள் இந்த அமைப்பின் மீதான பொதுமக்களின் அதிருப்தி, சங்கடம், கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அமைப்பினர் தீவிரமான, நிழலான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள் எனவும், இந்து மதத்தைப் பற்றிய குறுகலான நம்பிக்கையைப் பரப்ப முயல்கிறார்கள் எனவும் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

இந்திய தணிக்கைக் குழுவுக்கும், தேசியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கும் இந்தத் திரைப்படம் ஒரு பெரிய சவால். தனது படத்தின் மூலம் பட்வர்த்தன் யாரையெல்லாம் விமர்சிக்கிறாரோ, அவர்களே இந்த ஆவணப்படம் இந்தியாவில் வரக் கூடாது என்று முயல்வார்கள். ஹேமந்த் கர்கரேவின் மரணத்தின் மீதான கேள்விகள் சரிதானா, அறிவுபூர்வமானவையா என்ற கேள்விகள் எழும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மதிப்பீடுகளின்மீது பட்வர்த்தனுக்குப் பிடிப்பு இல்லையா என்று கேள்வி எழுப்பப்படும்.

ஆனாலும், இந்திய ஜனநாயகத்தின் மீது இவரது படம் வைத்திருக்கும் தவிர்க்க முடியாத உண்மைகள் போகாது. இதற்கு ஆகஸ்ட்டில் ஐந்து சமூகச் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதே சாட்சி. எந்தக் காரணத்துக்காக இது இந்தியா முழுவதும் பரவலாகத் திரையிடப்படாதோ, அதே காரணத்துக்காக இந்த ஆவணப்படத்தை நாம் பார்க்கவேண்டும், உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும், விவாதிக்க வேண்டும்.

இந்திய அரசைக் கவிழ்த்து இந்தியப் பிரதமர் மோடியைக் கொலைசெய்ய சதி செய்வதாகச் சந்தேகத்துக்கு இடமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதும் சோதனைகளும் சமூகச் செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகளின் மீது ஏவப்படும் இந்நிலையில், இந்தப் படம் டொரண்டோவில் திரையிடப்பட்டிருக்கிறது. ஆனந்த் டெல்டும்பே மீதான சோதனை, வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் கைதுசெய்ப்பட்டது ஆகியவை பட்வர்த்தன் ஆவணப்படத்தை எடுத்து முடித்த பிறகே நடந்தன என்றாலுமே, இவற்றுக்கான முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் `ரீசன்' திரைப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.


டிரெண்டிங் @ விகடன்