‘நீரவ் மோடியைச் சந்தித்தீர்கள்; நானே சாட்சி’- ராகுலுக்கு சவால்விடும் சமூக ஆர்வலர்

‘'டெல்லி ஹோட்டலில் நீங்கள் (ராகுல் காந்தி) நீரவ் மோடியைச் சந்தித்தீர்கள். அதற்கு நான் சாட்சி'’ என்று சமூக ஆர்வலர் பூனாவாலா தெரித்துள்ளார். 

ராகுல்காந்தி -நீரவ் மோடி

தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை நாடு கடத்த இந்தியா தொடர்ந்த வழக்கின்போது ஆஜரான மல்லையா, ``தான் வெளிநாட்டுக்கு வரும் முன் நிதியமைச்சரைச் சந்தித்தேன்'' எனக் கூறி இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்டுத்தினார். 

இதனிடையே, மல்லையா வெளிநாடு செல்லும் முன், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜெட்லியைச் சந்தித்ததாகவும், அதை காங்கிரஸ் எம்.பி., புனியா பார்த்ததாகவும், இதனால் அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்றும் அவர்மீது விசாரணை கமிஷன் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். 

பூனாவாலா

இந்த நிலையில், ``பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நீரவ் மோடி, முன்னதாக ராகுல் காந்தியைச் சந்தித்தார். அதை நான் பார்த்தேன்'' என சமூக ஆர்வலர் பூனாவாலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பூனாவாலா கூறுகையில், “ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன். ராகுல் காந்தி, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது நீரவ் மோடி மற்றும் அவரின் மாமா மெஹுல் ஷோக்‌ஷியையும் சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அதற்கு நான் சாட்சி. நீரவ் மோடிக்கு கடன் வழங்கப்பட்ட காலகட்டத்தில்தான் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. இதை ராகுல் மறுக்க முடியாது. உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார்; நீங்கள் தயாரா” எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்தை காங்கிரஸ் மறுத்தபோதிலும், இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!