வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (14/09/2018)

கடைசி தொடர்பு:13:05 (14/09/2018)

மழை வெள்ளத்துக்குப் பிறகு சபரிமலையில் நடை திறக்கப்படும் தேதி அறிவிப்பு!

கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளத்துக்குப் பிறகு, 'சபரிமலை ஐயப்பன் கோயில், வரும் 16- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்' என்று தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

சபரிமலை

வரலாறு காணாத வகையில் மழை பெய்து கேரளாவைப் புரட்டிப்போட்டது வெள்ளம். பம்பை ஆற்றில் வெள்ளம் 30 அடிக்கும் மேலே பாய்ந்ததால், நிறை புத்தரிசி விழா மற்றும் ஓணம் பண்டிகையின்போது, 'யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம்' என்று கோயில் நிர்வாகம் அறிவித்ததோடில்லாமல் நடையையும் சாத்தியது. மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது சபரிமலைப் பகுதி. கனமழையினால், சபரி மலையில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கட்டப்பட்டிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டுவருகிறது. வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரி மலை கோயில் நடை செப்டெம்பர் 16-ம் தேதி மாலை 5. 30 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரி மலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை காட்டுவார். அதன் பிறகு, 17-ம் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 21-ம்  தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். 

மழை வெள்ளத்துக்குப் பிறகு, புரட்டாசி மாத பூஜையையொட்டி சபரிமலை நடை திறக்கப்படுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கேரள அரசு பல்வேறு இடங்களிலிருந்தும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க