வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (14/09/2018)

கடைசி தொடர்பு:13:15 (14/09/2018)

`நெற்றியில் குங்குமம்; தலையில் துப்பட்டாவால் முக்காடு' - திருநங்கைகளை மகிழ்வித்த கம்பீர்

இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், துப்பட்டாவுடன் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் பரவிவருகிறது.

கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியில் கௌதம் கம்பீர் இடம்பெற்றிருந்த காலகட்டத்தில்தான், விளையாடும் போட்டியின்போது அடிக்கடி தலைப்புச் செய்தியாக வந்துவிடுவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில், கம்பீரின் பங்கு அளப்பரியது. அதன்பின்னர், அவரது மோசமான ஃபார்மின் காரணமாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் உள்ளார். இருப்பினும், அவரது செயல்கள் மற்றும் விமர்சனங்கள் மூலம் பத்திரிகைகளில் பேசப்பட்டுவருகிறார். இந்நிலையில் கம்பீர், தலையில் துப்பட்டா அணிந்து நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது. 

டெல்லியில், திருநங்கைகளால் கொண்டாடப்படும் ஹிஜ்ரா ஹப்பா (Hijra Habba) விழாவில் பங்கேற்க, கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அழைப்பை ஏற்று காம்பீர் விழாவில் பங்கேற்றுள்ளார்.  அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் துப்பட்டாவால் முக்காடு போட்டுக்கொண்டார். திருநங்கைகளின் வாழ்க்கைகுறித்து பேசியுள்ளார். கம்பீர் திருநங்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது இது ஒன்றும் புதிதல்ல. வட இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன் தினத்தில், திருநங்கைகள் தனக்கு ராக்கி கட்டும் புகைப்படத்தை கம்பீர் வெளியிட்டார். காம்பீரின் இந்தச் செயலைப் பாராட்டி பலர் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.