வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (14/09/2018)

கடைசி தொடர்பு:13:45 (14/09/2018)

மறுமணம் செய்தாலும் ஃபேமிலி பென்ஷன் வழங்கலாம்! - மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்

ளம் வயதிலேயே கணவரை இழக்கும் பெண்கள், மறுமணம் செய்துகொள்ள அஞ்சுவதற்கு இந்தச் சமுதாயம் மட்டுமே காரணமில்லை; பொருளாதார ரீதியாக முழுக்க முழுக்க கணவரை மட்டுமே அந்தப் பெண்கள் நம்பியிருந்திருப்பார்கள். கணவர் அரசுப் பணியில் இருந்தவர் எனில், அரசாங்க பென்ஷனை நம்பி இருப்பார்கள். மறுமணம் செய்வதால் பென்ஷன் என்கிற பொருளாதாரப் பாதுகாப்பு, முதல் கணவரால் பிறந்த குழந்தைக்குக் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்திலேயே சில பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை. ஆனால், மறுமணம் செய்துகொண்டாலும் ஃபேமிலி பென்ஷன் வருவதில் எந்தத் தடையும் இருக்காது; இருக்கவும் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தை, ரேணு குப்தா என்பவர் தொடுத்த வழக்கின் மீதான விசாரணையில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (Central Administrative Tribunal), மறுபடியும் அழுத்தம் திருத்தமாக நினைவுபடுத்தியுள்ளது.

மறுமணம்

டெல்லியைச் சேர்ந்தவர் ரேணு குப்தா. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். ரேணுவின் கணவர் ஶ்ரீபவன் குமார் குப்தா, அரசாங்கப் பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். கருணை அடிப்படையில் ரேணு குப்தாவுக்கு வேலையும் கிடைத்தது. ஃபேமிலி பென்ஷனும் கிடைத்து வந்தது. இந்தநிலையில், மறுமணம் செய்துகொண்ட ரேணு,  தன் முதல் கணவரின் ஃபேமிலி பென்ஷனை, தன் மகன் பெயருக்கு மாற்றித்தரும்படி கேட்டுக்கொண்டார். இது நடந்தது 2002-ம் ஆண்டில். ஆனால், 2013 வரை ரேணுவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மறுமணம் செய்துகொண்டார் என்று சொல்லி, ஃபேமிலி பென்ஷனும் தரப்படவில்லை. ரேணு வழக்குத் தொடுத்தார். விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், `ரேணு குப்தா மறுமணம் செய்துகொண்டாலும் ஃபேமிலி பென்ஷன் வழங்கப்பட வேண்டும். அவருக்கு ஆட்சேபனை இல்லாதபட்சத்தில், அந்த பென்ஷனை அவர் மகனுக்குத் தரலாம்' என்று சொன்னது. இன்னும் 4 மாதங்களுக்குள் அவருக்கான பென்ஷன் தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.