`ஆசைகள் நிறைவேறிவருவதை நம்பமுடியல'- காரைத் தொடர்ந்து கேரள மீனவருக்கு அடுத்த ஜாக்பாட்

கேரள வெள்ளத்தின்போது தன் முதுகை படிக்கட்டாக்கிய மீனவருக்கு காரைத் தொடர்ந்து, தற்போது வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

மீனவர் ஜெய்ஷால்

PhotoCredits : Twitter/@shkaboobacker

‘நல்லது செய்தால் நல்லதே நடக்கும்’ என்னும் வாக்கியம், கேரள மீனவர் ஜெய்ஷால் வாழ்க்கையில் உண்மையாகியுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32), கேரள வெள்ளத்தின்போது கடற்படை வீரர்களுக்கு இணையாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர். மலப்புரம் மாவட்டம், வெங்காரா பகுதியில் நடந்த மீட்புப்பணியின்போது, ஜெய்ஷால் தன் முதுகைப் படிக்கட்டாக்கிக்கொள்ள, பெண்கள் அவரின்மீது கால்வைத்து படகில் ஏறினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்றது. இவரின் மீட்புப் பணியைப் பாராட்டி, கோழிக்கோட்டைச் சேர்ந்த மகிந்ரா நிறுவனத்தின் டீலர் சார்பில் மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, தற்போது கேரளாவில் உள்ள சன்னி யுவஜன சங்கம் (Sunni Yuvajana Sangam) என்ற இஸ்லாமிய அமைப்பினர் ஜெய்ஷாலுக்கு வீடு ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளனர். நேற்று, இவரின் வீட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இதுகுறித்துப் பேசிய ஜெய்ஷால், “நான் இப்படி நடக்கும் என்று சற்றும் நினைக்கவில்லை. என் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டால்கூட என்னால் ஒரு வீட்டை வாங்க முடியாது. மாருதி 800 கார் வாங்குவதுகூட எனக்கு பெரும் கனவாகவே இருந்தது. ஆனால், என் ஆசைகள் எல்லாம் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேறிவருவதை என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறியுள்ளார். 

ஜெய்ஷாலின் மீட்புப் பணியைப் பற்றி அறிந்த மலையாளப் பட இயக்குநர் வினயன் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆகிய இருவரும் ஜெய்ஷாலுக்கு தலா ஒரு லட்சம் வழங்கியுள்ளனர். பரிசுகளுக்கு அப்பாற்பட்டு, கேரள வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜெய்ஷாலை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தினமும் கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வர தனக்கு அழைப்பு வருவதாக ஜெய்ஷால் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!