வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (14/09/2018)

கடைசி தொடர்பு:15:13 (14/09/2018)

நிர்பயா வழக்கை கிடப்பில் போட்டுவிட்டார்கள்; வருந்தும் தாய்

நிர்பயா... இந்தியத் தலைநகரில் ஆரம்பித்து உலகம் முழுவதும் அதிர்ச்சியுடன் உச்சரித்த பெயர். 2012-ம் ஆண்டு, புதுடெல்லியில் நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பியபோது, ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மருத்துவமனையில் போராடிப் பலியானவர். முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் சிங், ராம் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இதில், ராம் சிங் மூன்று மாதங்களில் தற்கொலைசெய்துகொண்டார். 2014-ம் ஆண்டில், மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதைப் பரிசீலித்து, தீர்ப்பு வழங்கும் வரை மரணதண்டனை நிறுத்திவைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, இந்த மனுக்களை 2017-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் ஷர்மா தலைமையிலான சட்ட அமர்வு விசாரித்தது. நான்கு குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்தது. 

நிர்பயா

ஆனால், இன்றுவரை எந்தத் தண்டனையும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், நிர்பயாவின் அம்மா ஆஷா தேவி, 'டெல்லி கமிஷன் ஃபார் வுமன்' அமைப்பில் மனுத்தாக்கல்செய்துள்ளார். பத்திரிகையாளர்களையும் சந்தித்து, "என் மகளுக்குக் கொடுமை நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன.

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டும் ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதற்கான அடுத்தகட்ட விவரத்தைக் கேட்பதற்காக டெல்லி கமிஷன் ஃபார் வுமனில் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளேன். நிர்பயா வழக்கு நிகழ்ந்தபோது, பெண்களுக்கு ஆதரவாகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. சில சட்டங்களில் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், அவை இப்போது வரை சட்டங்களாக மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை. ஆரம்பத்தில் காவல் துறையிலிருந்து எங்களுக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. நாள்கள் செல்லச்செல்ல நிர்பயா வழக்கை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது.

தினம்தினம் எத்தனையோ பாலியல் வன்கொடுமைச் செய்திகளைப் பார்க்கிறோம். அதையெல்லாம் செய்திகளாகவே கடந்துவிடுவதால், சிறுமிகளுக்கான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டது. சரியான நேரத்தில் தண்டனைகள் கொடுக்கப்படாமல் இருப்பதும், ஒரு வகையில் தவறுகளை அங்கீகரிப்பது போன்றதுதான். அதைத்தான் நம் அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது" என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.