ராஜ நாக விஷத்தை உடலில் ஏற்றி போதை! - ஆராய்ச்சி மருத்துவர்களை அதிரவைத்த இளைஞர்கள்

பாம்பு இனங்களில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் ராஜ நாகத்தை ராஜஸ்தான் இளைஞர்கள் இருவர் போதை வஸ்துவாகப் பயன்படுத்தியுள்ளனர். நம்ப முடியவில்லை அல்லவா? தொடர்ந்து படியுங்கள்... 

ராஜ நாகம்
 

தெற்காசிய பாம்பு வகையான ராஜ நாகம்தான் இந்தியாவின் தேசிய ஊர்வன உயிரினம். இணையத்தில் ராஜ நாகம் என்று தேடினால் அதன் விஷத்தன்மை பற்றிய செய்திதான் முதலில் வரும். ராஜ நாகம் ஒருமுறை கடித்தால், 20 பேரைக் கொல்லக்கூடிய அளவுக்கு விஷத்தன்மை வாய்ந்த நஞ்சு வெளியாகுமாம். அத்தகைய நஞ்சை கக்கக்கூடிய ராஜ நாகத்தின் நஞ்சுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். அவர்கள் தற்போது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சண்டிகர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்தான் இந்த இளைஞர்கள் குறித்து முதன் முதலில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டது. அதில் அந்த இளைஞர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி அவர்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிடவில்லை. அந்த இரண்டு ராஜஸ்தான் இளைஞர்களும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், பல ஆண்டுகளாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். ஏதோ ஒரு சூழலில் ராஜ நாகத்தின் நஞ்சுக்கும் அவர்கள் அடிமையாகியுள்ளனர். அதாவது ராஜ நாகத்தைப் பிடித்து அவர்களின் நாக்கில் கடிக்க வைத்து, அந்த நஞ்சை உடலில் ஏற்றிக்கொள்வார்களாம்.

ராஜ நாகம்
File photo

ராஜ நாகத்தின் நஞ்சு எந்தப் போதைப் பொருளாலும் கொடுக்க முடியாத மயக்கத்தைக் கொடுப்பதாக அந்த இளைஞர்கள் ஆராய்ச்சியாளர்களிடம் கூறியுள்ளனர். அவர்களின் வாக்குமூலம் ஆராய்ச்சியாளர்களையும் மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விசித்திர இளைஞர்களை வைத்து, `பாம்பின் நஞ்சை போதைப் பொருளாகப் பயன்படுத்த முடியுமா’ என்னும் தலைப்பில் சண்டிகர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் இளைஞர்களோடு சேர்த்து இதுவரை நான்கு பேர் இந்தியாவில் பாம்பு விஷ போதைக்கு அடிமையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன! 

Source : TOI

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!