வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (14/09/2018)

கடைசி தொடர்பு:19:35 (14/09/2018)

சந்தையில் மீண்டும் நல்ல முன்னேற்றம் 14-09-2018

நேற்றைய முன் தினம் நல்ல முன்னேற்றம் கண்டு அதற்கு முந்தைய இரு வணிக தினங்களில் அடைந்த நஷ்டத்தை ஓரளவு ஈடுகட்டிய இந்திய பங்குச் சந்தை, நேற்றைய விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் முன்னேறி மிகவும் உற்சாகமான நிலையில் வர்த்தகத்தை முடித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 372.68 புள்ளிகள் அதாவது 0.99 சதவிகிதம் உயர்ந்து 38,090.64 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 145.30 புள்ளிகள் அதாவது 1.28 சதவிகிதம் முன்னேறி 11,515.20-ல் முடிந்தது.

அமெரிக்கா, சீனாவுடன் மீண்டும் ஒரு வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதும், இந்த நிகழ்வு விரைவிலேயே நடக்கவிருக்கிறது என்ற செய்தியும் சர்வதேச சந்தைகளில் ஒரு உற்சாகமான போக்குக்கு வழிவகுத்திருக்கிறது.

இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த பத்து மாதங்களில் முதல் முறையாக 3.69 சதவிகிதம் என்று ரிசர்வ் வங்கியின் டார்கெட்டான நான்கு சதவிகிதத்துக்கு கீழ் வந்திருப்பது சந்தையின் உற்சாகத்துக்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும்.

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கெதிராக முன்னேற்றம் கண்டு, செவ்வாயன்று 72.91 என்றிருந்த நிலை மாறி, இன்று 71.52 என்ற அளவுக்கு ரெக்கவர் ஆனது மிக முக்கிய காரணமானது. இந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த சில நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு ஆலோசனை செய்யவிருப்பதாக வந்த செய்தி இந்த முன்னேற்றத்துக்கு உதவியிருக்கிறது.

இன்று சந்தையில் தகவல் தொழில் நுட்பத் துறை பங்குகள் தவிர ஏனைய துறைகள் சார்ந்த பெரும்பாலான பங்குகளின் விலைகள் நன்கு உயர்ந்தன. ரியல் எஸ்டேட், எண்ணெய், பவர், உலோகம், மருத்துவம் மற்றும் கன்சூமர் ட்யுரபிள்ஸ் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. ஆட்டமொபைல், வங்கி மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறைகளிலும் பல பங்குகள் நல்ல லாபத்துடன் முடிவுற்றன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் 7.2%
பாரத் பெட்ரோலியம் 6.25%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 5%
இந்தியன் ஆயில் 4%
பஜாஜ் பின்சர்வ் 5.6%
வேதாந்தா 5.3%
யு.பி.எல் 4.5%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 4.1%

பவ்ர் கிரிட், ஹிண்டால்கோ, ஏசியன் பெயின்ட்ஸ், என்.டி.பி.சி., பஜாஜ் ஃபைனான்ஸ், யெஸ் பேங்க், ஹௌசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, இண்டஸ்இந்த் பேங்க், ஓ.என்.ஜி.சி, சன் பார்மா, பார்தி ஏர்டெல் பங்குகள் 2.3 சதவிகிதம் முதல் 3.3 சதவிகிதம் வரை முன்னேறின.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1826 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 831 பங்குகள் விலை சரிந்தும், 174 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.