`இனி நான் எனக்காக வாழப்போகிறேன்' - விஞ்ஞானி நம்பி நாராயணன் உருக்கம்!

`என்னுடைய சட்டப் போராட்டம் இன்றைய தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி நான் எனக்காக வாழப்போகிறேன்' என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

நம்பி நாராயணன்

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் திரவ எரிபொருள் பயன்படுத்தும் ராக்கெட் இன்ஜின்களை உருவாக்கியவர். இந்த நிலையில்தான் 1994-ம் ஆண்டு மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண்ணை கேரளா போலீஸ் திருவனந்தபுரத்தில் கைது செய்து, அவரிடத்தில் இருந்து இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட் இன்ஜின்களின் வரைபடங்களைக் கைப்பற்றியது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கிரயோஜெனிக் இன்ஜின் ரகசியங்களை விற்றதாகக் கிரயோஜெனிக் இன்ஜின் வடிவமைப்பு திட்டத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வுக்கு பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய முதல்வர் கருணாகரனுக்கும் உம்மன் சாண்டிக்கும் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விஞ்ஞானி நம்பிநாராயணன் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

நம்பி நாராயணன்

2001-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்ற நம்பி நாராயணன் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நம்பி நாராயணன், "காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்கப்படும் என இந்த வழக்கில் முதலில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அது இப்போது மாறியிருக்கிறது. அதுபற்றி எனக்கு வருத்தம் இல்லை. இதுவரை நான் போராடினேன். என்னுடைய சட்டப் போராட்டம் இன்றைய தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி நான் எனக்காக வாழப்போகிறேன்" என்றார். காங்கிரஸ் கோஷ்டி மோதல் காரணமாகப் பழிசுமத்தப்பட்டதா என அவரிடம் கேட்டதற்கு, "அதுபற்றி எனக்கு நினைவில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!