`பணமதிப்பிழப்புக்கான நோக்கம் நிறைவேறிவிட்டதா?' - பா.ஜ.க-வுக்கு கேள்வி எழுப்பும் மம்தா

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான நோக்கம் நிறைவேறிவிட்டதா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மம்தா பானர்ஜி


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்குப் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், ``99.3 சதவிகித செல்லாத ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டதற்கான தேவை என்ன? கறுப்புப் பணத்தை எல்லாம் வெள்ளையாக்கத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா, அதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டதா? பாரதிய ஜனதா கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது 31 சதவிகித வாக்குகளைப் பெற்று 283 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால்,  அடுத்து வர உள்ள 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இப்படி அமைய வாய்ப்பில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பா.ஜ.க கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாடு முழுவதும் இந்து கிளர்ச்சியாளர்கள் அதிகரித்துவிட்டனர். அவர்களால் அப்பாவி பொதுமக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். நம் நாடு ஒற்றுமையாக இருக்கவே, நாம் விரும்புகிறோம், எனவே கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கக் கூடாது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன'' என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார் மம்தா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!