வெளியிடப்பட்ட நேரம்: 05:03 (15/09/2018)

கடைசி தொடர்பு:08:33 (15/09/2018)

பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நீண்ட நேர சந்திப்பு - பின்னணி என்ன?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, விஜய் மல்லையா சந்திப்பு குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்வி என்று பல களேபரங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசியுள்ளனர். 

பிரதமர் மோடி நிதியமைச்சர் அருண் ஜெட்லி

நேற்று மாலை (14.09.2018) புது டெல்லியில், பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பின், `நாட்டின் பொருளாதார நிலை மேம்படுத்துவது குறித்தும், புதிய நிதிக் கொள்கை உருவாக்குவது குறித்தும் விவாதித்துள்ளதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வும், தொடர்ந்து சரிவைச் சந்தித்துவரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் எதிர்க்கட்சிகளின் பிரதான பிரசாரமாக மாறிவருகிறது. இந்த இரண்டு விஷயத்துக்கும் முற்றுப்புள்ளிவைக்க வேண்டியது அவசியம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் பல மணி நேர ஆலோசனைக்குப் பின்பு, பொருளாதாரத்தை மேம்படுத்த ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து முக்கிய முடிவுகளில், உள்நாட்டில் கட்டுமானம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் 50 மில்லியன் டாலர் அளவுக்கு கடனுதவி பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குவது குறித்தும், அதிக அளவில் பங்குப் பத்திரங்கள் விற்பனை செய்யவும், இதற்கு வரி விலக்கு வழங்கி பொதுமக்களை அதிக அளவில் பங்குபெற வைக்கவும், பங்குப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் அதிகரித்து வரும் இறக்குமதி அளவைக் குறைக்கவும், குறைந்துவரும் ஏற்றுமதி அளவை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடந்திருக்கிறது.

இருவரின் சந்திப்புகுறித்து விளக்கமளித்துள்ள பொருளாதார விவகாரத்துறை செயலர் கார்க், `` இன்றைய கூட்டத்தில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்பதுகுறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. ஐந்து முக்கிய அம்சங்களை நடைமுறைப்படுத்தும்போது, 8 முதல் 10 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுகுறித்து விவாதிக்கவில்லை. பிரதமரும், நிதியமைச்சரும் நாளையும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்” என்றார்.