வெளியிடப்பட்ட நேரம்: 04:33 (15/09/2018)

கடைசி தொடர்பு:08:26 (15/09/2018)

``மூன்று நாளைக்கு மட்டுமே போதுமான நிலக்கரி! மத்திய அரசு நிலக்கரி வழங்காவிட்டால் மின்வெட்டு!”

`தமிழகத்தில் மூன்று நாள்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. தமிழகத்துக்கு உடனடியாக நிலக்கரி வழங்காவிட்டால், மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும். மின்வெட்டுப் பிரச்னையைத் தவிர்க்க, மத்திய அரசு உடனடியாக நிலக்கரி வழங்கும்படி’ பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

மின்வெட்டு


கடந்த வாரம் தி.மு.க தலைவர் ஸ்டாலின், `தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு' உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதை மறுத்த மின் துறை அமைச்சர் தங்கமணி, ``தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் மின்வெட்டு இருந்தது. தற்போது, தமிழ்நாடு மிகை மின் மாநிலமாக இருக்கிறது” என்றார். இந்த நிலையில், நேற்று (14.09.2018), `தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், `தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது இருப்பு குறைந்து, மூன்று நாள்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது.  இதுவரை உதவிவந்த கற்றாலை மின் உற்பத்தியும் செப்டம்பர் மாதத்தோடு குறைவாகக் கிடைக்கும் நிலையில், போதுமான நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உள்ளது. மத்திய அரசு, உடனடியாக அதிக அளவில் நிலக்கரி வழங்காவிட்டால், தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும். இதனால், தமிழகத்துக்குத் தேவையான அளவு நிலக்கரியை ஒதுக்கீடுசெய்யும்படி மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கும், நிலக்கரியை உரிய நேரத்தில் கொண்டுசேர்க்க ரயில்வே துறைக்கும் உத்தரவிட வேண்டும்’  என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், ``20 நாள்களுக்கு முன்பே மத்திய அரசிடம் உதவி கேட்டிருக்கவேண்டிய நிலையில், மூன்று நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு இருக்கும் நிலையில் உதவிக் கேட்கிறார் முதல்வர். இதனால், தமிழகத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் வெட்டு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்கின்றனர்.