வெளியிடப்பட்ட நேரம்: 06:50 (15/09/2018)

கடைசி தொடர்பு:08:09 (15/09/2018)

'மகனுக்கே முக்கியத்துவம்; தந்தையைத் தேர்தலில் தோற்கடிப்பேன்" - அமைச்சர் மகள் ஆவேசம்!

``மகனுக்கே முக்கியத்துவம்; மகளைக் கண்டுகொள்வதில்லை. என் தந்தையைத் தேர்தலில் தோற்கடிப்பேன்" என ஆவேசமாகக் களமிறங்கியிருக்கிறார், பீகாரில் முதன்மையான கட்சியின் தலைவராக இருக்கும் பாஸ்வான் மகள் ஆஷா. 

பாஸ்வான்

மத்திய உணவுத்துறை அமைச்சரும், லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறார், அவரது மகள் ஆஷா. 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வாரிசு அரசியலுக்குப் பஞ்சமில்லை. பீகாரில் லாலு பிரசாத் மகன்கள் இருவரும் அமைச்சராக இருந்தவர்கள். லோக் ஜன்சக்தி கட்சித் தலைவராக உள்ள ராம் விலாஸ் பாஸ்வான் தனது  மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கியுள்ளார். மகளைக் கவனிக்காததால், தற்போது தன் தந்தைக்கு எதிராக லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியில் இணைந்து  தீவிர அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டுவருகிறார், பாஸ்வானின் மகள் ஆஷா. 

ராம் விலாஸ் பாஸ்வானின் முதல் மனைவி ராஜ்குமாரி தேவி. இவரை விவாகரத்து செய்த பாஸ்வான், ரீனா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் மகள் ஆஷா, “என் தந்தை எப்போதுமே மகள்களைவிட மகன்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். தனது இரண்டாவது மனைவியின் மகனான சிரக் பாஸ்வானை எம்.பி-யாக்கியிருக்கிறார். பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதற்குத் தகுந்த பாடம்புகட்ட, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், என் தந்தையின் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்டு, அவரைத் தோற்கடிக்கத் தயாராகிவருகிறேன்” என்கிறார்.