வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (15/09/2018)

கடைசி தொடர்பு:12:35 (15/09/2018)

`தற்கொலை அல்ல; சடங்கில் ஏற்பட்ட விபத்து!' - 11 பேர் மரணத்தில் அதிர்ச்சி அறிக்கை

டெல்லி புராரி பகுதியில், 11 பேர் மரணம் தற்கொலை அல்ல; அது விபத்துதான் என தடயவியல் ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை

ஜூலை 1, டெல்லி புராரி பகுதியைப் பெரும் அச்சத்துக்குள்ளாக்கிய மிகப்பெரும் சம்பவம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்ததுதான். அந்த வீட்டைக் கடக்கும் மக்கள், இன்னும் அச்சத்துடனேயே செல்கின்றனர். மொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது இந்தக் குடும்பத்தின் இறப்பு. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர்களின் தற்கொலைக்கான சரியான காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறிவந்தனர். இதனால், இந்த வழக்கில் உளவியல் பிரேதப் பரிசோதனை தேவைப்படுவதாக டெல்லி போலீஸார் சி.பி.ஐ-க்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கில், தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

‘இறந்தவர்களை உளவியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வில், அந்தச் சம்பவம் தற்கொலை அல்ல; அவர்கள் நடத்திய சடங்கின்போது ஏற்பட்ட விபத்து. இறந்தவர்கள் யாரும் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பவில்லை’ என சிபிஐ ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஐ நடத்திய உளவியல் ஆய்வின்போது, இறந்தவர்களின் வீட்டில் இருந்து போலீஸார் கைப்பற்றிய ஆவணங்கள், உறவினர்களின் வாக்குமூலங்கள் போன்றவை ஆராயப்பட்டன. மேலும், மரணத்து முன் இறந்தவர்களின் மனநிலையை அறிய அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இறந்தவர்களின் குடும்ப உறுப்பினரான லலித் சுந்தவத் என்பவர் தன் இறந்த தந்தையைப் பார்த்ததாகவும், அதனால் அவர் கூறியதாக சில விசயங்களைத் தன் குடும்ப உறுப்பினர்களை செய்யச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்தான் தன் குடும்ப உறுப்பினர்களை வாய் மற்றும் கையைக் கட்டி, இந்தச் சடங்குகளை செய்யச் சொல்லியிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.