வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:16 (17/09/2018)

கண்முன்பே கொல்லப்பட்ட காதல் கணவன்... நிலைகுலைந்த கர்ப்பிணி மனைவி.. அதிரவைத்த ஆணவக்கொலை!

தெலங்கானாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் காதல் மனைவி முன்பு கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஆணவக் கொலை


தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்னும் பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளி நட்பு காதலாக மாறியது. அம்ருதாவின் தந்தை மாருதிராவ் ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரியவர பிரச்னை வெடித்தது. பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அம்ருதாவிடம் பிரனய் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி மிரட்டினார்.

அம்ருதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து பிரனய் - அம்ருதா கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் அம்ருதா உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அம்ருதா திருமணம் செய்துகொண்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரனய்யின் பெற்றோருடன் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வந்தனர். 

அம்ருதாவின் தந்தை

அம்ருதாவின் தந்தை..
 

இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைந்தார். பிரனய் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று மதியம் அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவர்களுடன் பிரனய் தாய் பிரேமலதாவும் சென்றார். பரிசோதனை முடிந்து 3 பேரும் மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோது, அவர்களின் பின்னால் நடந்து வந்த மர்ம நபர் பிரனய்யை அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்தக் காட்சி மருத்துவமனையின் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. 

சிசிடிவி காட்சியில்.. பிரனய் தன் மனைவியுடன் பேசிக் கொண்டே மருத்துவமனை வாசலை நோக்கி நடந்து செல்கிறார். அவர்களின் பின்னால் பிரனய்யின் தாய் நடந்து வருகிறார். பிரனய்யைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரனய்யின் கழுத்தில் வெட்டுகிறார். பிரனய் துடிதுடித்து கீழே விழுகிறார். அம்ருதா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். பிரனய்யின் தாய் அந்த மர்ம நபரைத் தள்ளிவிட, அரிவாளோடு தப்பியோடுகிறார். அம்ருதா வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் கணவரைக் காப்பாற்றும்படி மருத்துவமனைக்குள் அழுது கொண்டே ஓடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. 

 

 

பிரனய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்ருதாவின் தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி பிரனய்யைக் கொலை செய்து இருப்பதாக பிரனய் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மாருதிராவை கைது செய்யக்கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். மாருதிராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

அம்ருதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தான் தாய் ஆகப் போவதை குறித்து மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் பிரனய்யின் மரணம் அவரை நிலைகுலையச் செய்துள்ளது. 

இந்தச் சம்பவம் 2016-ம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய சங்கர் ஆணவக்கொலையை நினைவுப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆணவக் கொலைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க