'விமான விபத்துக்கு சமூக வலைதளங்களே காரணம்!' - விமானப்படைத் தளபதியின் விளக்கம்

2013ல், இந்தியப் போர் விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார். 

விபத்து

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இந்தியன் சொசைட்டி ஆஃப் ஏரோஸ்பேஸின் 57-வது மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரேந்தர் சிங் தனோவா கலந்துகொண்டார். விமான ஓட்டுநர்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பதால், அவர்கள் சரிவர தூங்கமுடியாமல் போகிறது என்று சமூக வலைதளங்கள்மீது குற்றம் சுமத்தியுள்ளார். 

நிகழ்ச்சியில் பிரேந்தர் சிங் தனோவா பேசுகையில், ``இரவில், சமூக வலைதளங்களை விமான ஓட்டுநர்கள் அதிக நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது தெரிகிறது. இதனால், இரவில் விமானிகள் சரிவர தூங்குவது இல்லை. ஆகையால், அதிகாலையில் விமானங்களை இயக்க அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் உத்தளை விமானப்படை நிலையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு போர் விமானம் விபத்துக்குள்ளானதுக்குக் காரணம் இதுவே. முன்பெல்லாம் விமானிகள் மது அருந்தியதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். விமானி ஒருவர் மது அருந்தியதை இன்னொரு விமானி கண்டுபிடித்து, அவரை விமானத்தை இயக்காமல் பார்த்துக்கொள்வார். ஆனால், தற்போதைய நிலையில், இதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. விமானிகள், போதுமான தூக்கம் கிடைக்கிறதா என்பதைக் கண்டறியும் வழிமுறைகளை மருத்துவத்துறை வல்லுநர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!