கண்முன்னால் தோழிக்கு நடந்த கொடுமை! - தற்கொலை செய்துகொண்ட ஆண் நண்பர் | Teenage Boy Commits Suicide After His girl Friend Was Gangraped In Front Of Him In Chhattisgarh

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (15/09/2018)

கடைசி தொடர்பு:14:45 (15/09/2018)

கண்முன்னால் தோழிக்கு நடந்த கொடுமை! - தற்கொலை செய்துகொண்ட ஆண் நண்பர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பாவில் 19 வயது இளம்பெண்ணை, அவரின் ஆண் நண்பரின் கண்முன்னே இரண்டு நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஸ்வான் என்ற அந்த நண்பர், தற்கொலை செய்துகொண்டது பரபரப்பாகியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

கடந்த வாரம் ஸ்வான் மற்றும் அவரின் பெண் தோழி கடைவீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினர். அப்போது, இரண்டு நபர்கள் வழிமறித்து செல்போன், பணம் போன்றவற்றை வழிப்பறி செய்துள்ளனர். அதன்பிறகு, ஸ்வானை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர். அவர் கண் முன்பே பெண் தோழியை வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். மறுநாள் காலை, மருத்துவமனையிலிருந்தபடி பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் மனதளவில் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஸ்வான், தன்னுடைய வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஈஸ்வர் தாஸ், கன்வர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து,போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஸ்வானின் பெற்றோர், ``என் மகன் மிகவும் சென்சிட்டிவானவன். அவனால் அங்கு நடந்த கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வந்தும், 'என்னால் தோழியைப் பாதுகாக்க முடியவில்லையே' என அழுதான். ஆனால், இப்படித் தற்கொலை செய்துகொள்வான் என எதிர்பார்க்கவில்லை'' எனக் கதறினர்.