கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது இந்தியா! - பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம் | India purchase oil from Iran will drop next month

வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (15/09/2018)

கடைசி தொடர்பு:14:39 (15/09/2018)

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது இந்தியா! - பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்

இரானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யைப் பாதியாக குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 

கச்சா எண்ணெய்

சமீபத்தில் இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதையடுத்து, இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது. மேலும், இரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் தங்கள் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மீறினால் அந்த நாடு மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது இரான் மீது பெட்ரோலிய தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தத் தடை வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. 

அமெரிக்காவின் பொருளாதார தடையால் இரானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யைப் பாதியாக குறைக்க இந்திய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. முன்னதாக ஏப்ரல்- ஆகஸ்ட் மாதம் வரையில் 6,58,000 பேரல்கள் இறக்குமதி செய்துவந்த இந்தியா, இனி 3,60,000 முதல் 3,70,000 பேரல்கள் வரை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. முன்பை விட 45 சதவிகிதம் இறக்குமதி குறைந்துள்ளது. 

இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் வரும் நிலையில் தற்போது இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளதால் மேலும் பெட்ரோல் விலை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.