`லாப விகிதத்தைவிட அதிகம்!’ - உச்சத்தில் இந்திய சிஇஓ-க்களின் ஊதிய உயர்வு | Indian CEOs' salaries increase at faster rate than companies' profit, says report

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (15/09/2018)

கடைசி தொடர்பு:16:00 (15/09/2018)

`லாப விகிதத்தைவிட அதிகம்!’ - உச்சத்தில் இந்திய சிஇஓ-க்களின் ஊதிய உயர்வு

ந்திய நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரி எனப்படும் சிஇஓ-க்கள் மற்றும் புரமோட்டர்களின் சம்பள விகிதம், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் லாப விகிதத்தைக் காட்டிலும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. 

சிஇஓ

இது தொடர்பாக நடத்தப்பட்ட சர்வே-யில், பங்குச் சந்தையில் பட்டியலியப்பட்ட 172 நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே தங்களது சிஇஓ அல்லது புரமோட்டர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் 10 கோடி ரூபாயை ஊதியமாக வழங்கி வரும் நிறுவனங்களாகும். 

இந்த நிலையில், இந்த நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம், ஆண்டுக்கு சுமார் 19.3 சதவிகிதம் உயர்த்தப்பட்டு வந்துள்ளது. அதே சமயம் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய், ஆண்டுக்கு சுமார் 13 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டால், அது வெறும் 10 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை சிஇஓ-க்களுக்கு, வளர்ச்சிக்கான நல்ல சூழல் நிலவுகிறது. ஆனால், அந்த வளர்ச்சி அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, நிறுவனத்தின் வருவாய் விகிதம், அவர்கள் ஈட்டும் அதிக ஊதியத்துக்கு ஏற்றபடி இல்லை. மேலும், அதிக வளர்ச்சி கொண்ட நிறுவனங்களில் கூட மற்ற ஊழியர்களின் சம்பளம், அங்கு பணிபுரியும் சிஇஒ-க்களுக்கு ஏற்றபடி உயர்த்தப்படுவதில்லை. 

2017-18, 2016-17, 2015-16 ஆகிய நிதியாண்டுகளில் சிஇஓ-க்களின் சம்பள விகிதம் முறையே 20.4%, 13% மற்றும் 21.6% உயர்த்தப்பட்டுள்ளன. அதே சமயம், கடந்த 3 நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்களின் நிகர விற்பனை, முறையே 12.9%, 8% மற்றும் 5.5% என்ற அளவிலேயே காணப்படுகின்றன. மேலும், இந்த நிறுவனங்களின் செயல்பாட்டு லாபமும், நிகர லாபமும்  சிஇஓ-க்களின் சம்பளம் உயர்ந்ததற்கு ஏற்ப வளர்ச்சி காணவில்லை என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சம்பளம்

இதுகுறித்து இத்துறை நிபுணர்கள், ``சிஇஓ-க்கள், தங்கள் நலன் மற்றும் வளர்ச்சியில் மட்டும் கவனமாக இருந்து, தங்களுக்கு எவ்வளவு ஊதியம் தேவை என்று கருதுகிறார்களோ அதை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். எனவே, நிறுவனங்கள் தங்களது சிஇஓ-க்களின் சம்பளம் குறித்து முடிவெடுக்கும்போது நிறுவனத்தின் லாபம் உள்ளிட்ட அனைத்து நிதி அளவீடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்கள். ஆனால், ``மேற்குலக நாடுகளின் சிஇஓ-க்களுடன் ஒப்பிடுகையில், இந்திய சிஇஓ-க்களுக்கு வேலைப்பளுவும், அழுத்தங்களும் அதிகம்" என்று கூறி அதிக சம்பள விகிதத்தைச் சிலர் நியாயப்படுத்தவும் செய்கின்றனர். 

இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச்ஆர் நிபுணர்கள், `` நிறுவனங்களின் லாபத்துக்கும் அதன் சிஇஓ-க்களின் சம்பளத்துக்கும் தொடர்பில்லை. சம்பந்தப்பட்ட நபரின் தனித்திறமை, கம்பெனியை அவர் எவ்வாறு வழிநடத்திச் செல்லப்போகிறார் என்பது குறித்து நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே இந்தச் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர். 

====================================================

'மேனேஜர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க இனி அரசு ஒப்புதல் தேவையில்லை!

கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களது தொழில் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை எளிமைப்படுத்தவும்,  அரசு அனுமதிக்காகக் காத்திருக்கும் போக்கைக் குறைக்கவும்,  ' குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிர்வாகம்' ( Minimum Government-Maximum Governance) என்ற கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன்படி, சிஇஓ-க்கள், மேனேஜர்கள் போன்ற நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்களுக்கான சம்பளத்தை, நிறுவனத்தின் லாபத்தில் 11 சதவிகிதத்துக்கு அதிகமாகக் கொடுப்பதாக இருந்தால், அதற்கு அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறையை இனி பின்பற்ற அவசியமில்லை. நிறுவனங்களின் நிர்வாகக் குழுவே, பங்குதாரர்களின் கூட்டத்தைக் கூட்டி அதற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

==================================================

நீங்க எப்படி பீல் பண்றீங்க