வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:56 (15/09/2018)

`தெய்வத்தின் கையில் அர்ப்பணிக்கிறேன்' - பதவியை ராஜினாமா செய்தார் பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்

ன்னியாஸ்திரி பாலியல் வழக்கு விசாரணைக்காக வரும் 19-ம் தேதி ஆஜராகும் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

பிஷப் பிராங்கோ முளய்க்கல்

ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல் கேரளாவில் உள்ள கான்வென்டில் வைத்து தன்னை 2014 - 16-ம் ஆண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரி புகாரை அடுத்து ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் கொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கன்னியாஸ்திரிகள் வாட்டிகானுக்கு புகார் அனுப்பினர். அதன் அடிப்படையில் பிஷப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வரும் 19-ம் தேதி ஆஜராகக் கோரி பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்ட பிஷப் விசாரணைக்கு ஆஜராக தயாராகி வருகிறார். முன் ஜாமீன் பெறுவதற்கும் பிஷப் இதுவரை முயற்சி செய்யவில்லை.

கன்னியாஸ்திரி போராட்டம்

இந்த நிலையில் தனது தலைமைப் பொறுப்பை பிஷப் பிராங்கோ முளய்க்கல் இன்று ராஜினாமா செய்தார். மேத்யூ கோக்கண்டம் ஜலந்தர் பிஷப் பொறுப்பை கவனித்துக்கொள்வார் எனக் கூறப்படுகிறது. பிஷப் பிராங்கோ முளய்க்கல் தனது ராஜினாமா கடிதத்தில், "புகார் அடிப்படையில் காவல்துறை தயாரித்த அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளன. எனக்கும், எனக்கு எதிராகப் புகார் அளித்தவருக்கும், அவருக்கு துணையாக நிற்பவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். தெய்வத்தின் கிருபையால் உண்மை வெளியே வருவதற்காக நான் ராஜினாமா செய்கிறேன். எல்லாவற்றையும் தெய்வத்தின் கைகளில் அர்ப்பணிக்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து பிஷப் கைது செய்யப்படலாம் என்பதால் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.