இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு! - சுகாதார அமைச்சகம் தகவல் | 21.4 Lakh People have HIV in India

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (15/09/2018)

கடைசி தொடர்பு:17:20 (15/09/2018)

இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு! - சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

எய்ட்ஸ் நோய்

மொத்த இந்தியாவிலும் 21.4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் உள்ளதாகவும் அதிலும் குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் 3.3 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் 69,000 பேர் எய்ட்ஸ் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ‘2017 எய்ட்ஸ் மதிப்பீடுகள்’ என்ற ஆய்வு முடிவை நேற்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவின்படி ஆந்திராவில் 2.7 லட்சம், கர்நாடகாவில் 2.47 லட்சம், தெலங்கானாவில் 2.04 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரத்தில் 2.04 சதவிகிதத்தினரும் மணிப்பூரில் 1.42 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்தான் எய்ட்ஸ் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது. 

கடந்த வருடம் 22,677 எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் பெற்றுள்ளனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் ஒருபங்கினர் பெண்கள். மேலும் 87,000  பேருக்கு புதிதாக எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாகத் தெலங்கானாவில் 9,324 பேருக்குப் புதிதாக எய்ட்ஸ் இருந்துள்ளது. 2005-ம் ஆண்டுக்குப் பின்னர், எய்ட்ஸ் நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.