`நிலம் எனக்கு அதிகார அமைப்பு கிடையாது; அது ஓர் உணர்வு' - மௌனன் யாத்ரிகா | Mounan Yathirika says about his journey

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (15/09/2018)

கடைசி தொடர்பு:11:47 (16/09/2018)

`நிலம் எனக்கு அதிகார அமைப்பு கிடையாது; அது ஓர் உணர்வு' - மௌனன் யாத்ரிகா

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித்துடையார் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் மௌனன் யாத்ரிகா. அரியலூர் அரசுக் கல்லூரியில் இளங்கலை தமிழ், சென்னை மாநிலக் கல்லூரியில் M.A, M.Phil படித்தவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அழகியப் பெரியவனின் சிறுகதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பின்பு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி தொடர்பான வேலைகளைச் செய்தவர் தற்போது அரியலூர் அரசுக் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

மெளனன்
 

சமீபத்தில் வெளியான இவரின் `நொதுமலர்க்கன்னி' கவிதை நூல் மிகுந்த வரவேற்பு பெற்றது. ரயில் தடதடக்கும் ஓர் அந்திப் பொழுதில் நடைமேடை மீதிருந்த ஈச்சமர நிழலில் அமர்ந்து பேசுகையில், அருகில் சரக்கு ரயிலில் ஜல்லிக்கற்கள் ஏற்றும் சத்தம் எங்கள் உரையாடலை விழுங்க புங்கமரத்தடியில் அமர்ந்து பேசினோம். பின்பு, ஆயிரம் கால் மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்து நீரற்ற ஏரியையும் ஆலமரம் முளைத்த கோயில் சுவரையும் வெறித்தபடி மாட்டுச் சாணம் மணக்க மணக்க உரையாடினோம். இனி உரையாடலிலிருந்து....    

இலக்கியத்தின் மீது எப்படி ஆர்வம் வந்தது?

என் தாத்தா ஒரு கதைசொல்லி. சுற்றுவட்டார கிராமங்களுக்கு, தொலைவில் உள்ள ஊர்களுக்கு எல்லாம் சென்று கதை சொல்வார். இப்படி மாலை, இரவு நேரங்கள் என நீடித்த கதை சொல்லலுக்குக் கூலியாக தானியங்களைப் பெற்றுக்கொண்டு விடியலில் வீடுவருவார். இன்னும் வீட்டுக்குத் தேவையான பொருள்களையெல்லாம் மக்கள் கொடுத்து அனுப்புவார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் கதை சொன்ன என் தாத்தா, அவரின் மடியில் கிடந்த நிலையில் பிரத்யேகமா எனக்குச் சொன்னாரா என்றால் இல்லை என்பேன். ஆனால், கதை சொல்லும் ஊருக்குச் செல்கையில் அவர் தோளில் என்னைச் சுமந்து செல்வார். அப்போது கதை கேட்டிருக்கிறேனா என்று ஞாபகம் இல்லை.ஒருவேளை சொல்லியிருக்கக் கூடும்.

என் தாத்தா சிறந்த கதைசொல்லி என்பதால் அதன் தொடர்ச்சிதான் நான் என்பதை உறுதியாக நம்புகிறேன். மொழி வசப்பட்டு தெளிவாக எழுத ஆரம்பித்த பிறகு என்னுடைய எழுத்தானது கதை சொல்லும் முறையில்தான் இருக்கும். ஆனால், ட்ரமாடிக்கா இருக்கும். இயல்பா நான் கவிதை எழுதத் தொடங்கியதற்கு காரணம் காதலாக இருக்கலாம்; வாசித்த கவிஞர்களா இருக்கலாம்; உள்ளார்ந்து பாடுபொருளை எடுக்கும்போது அது கதையாகத்தான் வந்தது. என் கவிதைக்குள் முழுக்க முழுக்க கதைதான் இருக்கும். எனவே, என் எழுத்தின் மூலமாக நான் நினைப்பது என் தாத்தாதான். அவருடைய பாதிப்பு என்னிடமும் இருக்கிறது. அந்த நாடோடித் தன்மையின் எச்சம்தான் நான். இது என் எல்லாப் படைப்புகளிலும் பிரதிபலிக்கும். அவர் படிக்காத கதை சொல்லி; நான் படித்த கதை சொல்லி. 

`நொதுமலர்க்கன்னி' என்ன அர்த்தம்?

நற்றிணை, குறுந்தொகை போன்ற பண்டைய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சொல்தான் நொதுமலர்க்கன்னி. இச்சொல் அக இலக்கியத்தில்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நொதுமலர் என்கிற சொல்லை பலபேர் `மலர்' என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், அது மலர் கிடையாது. அயலவர் என்று அர்த்தம். நொதுமலர்க்கன்னி என்றால் வேறொரு நிலத்தைச் சேர்ந்த பெண். 

`மௌனன் யாத்ரிகா' புனைபெயரின் காரணம். எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள். அவை எப்போது வெளியாகின?

அப்பா அம்மா வெச்ச பெயர் கொளஞ்சிநாதன். நண்பன் வைத்த பெயர் மௌனன். ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. முதல் நூல் பேய்த்திணை. இரண்டாவதாக விஜயா பதிப்பகம் மூலமாக வெளிவந்த `இனிக்கும் பழம்'. இது முழுக்க முழுக்க காதல் கவிதைகள். இவை இரண்டு புத்தகங்களும் மௌனன் என்ற பெயரில்தான் வெளியாகின. பிறகு, நீண்ட நாள்களாக எழுதாமல் இருந்தேன். மீண்டும் எழுத வந்த போது `மௌனன்' எனபது ரொம்பச் சின்னதா இருக்கிறதே என்று யாத்ரிகாவை இணைத்துக்கொண்டேன். மௌனன், யாத்ரிகா இரண்டையும் இணைக்கையில் பௌத்த மனநிலை எனக்குள் வரும்.

மூன்றாவது தொகுப்பு `நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது', இதை `எழுத்து' இலக்கிய அமைப்பு கொண்டுவந்தாங்க. நூல் வெளியீடு மதுரையில் நடைபெற்றது. கவிப்பேரரசு வைரமுத்து நூலை வெளியிட்டார். தமிழச்சி தங்கபாண்டியன் அந்நூல் குறித்து சிறப்பாகப் பேசுனாங்க. முதல் முறை மதுரைக்கு அப்போதுதான் சென்றேன். அதுவும் குடும்பத்தோடு. இலக்கியம் என்றாலே மதுரை; சினிமா என்றாலே மதுரை. இப்படி மதுரை என்ற ஊர் பெரிய பிம்பமாக இருந்ததால், மதுரையைப் பார்ப்பதற்காகவே நூல் வெளியீட்டில் கலந்துகொண்டேன். கவிஞர் இந்திரன் மூலமாகத்தான் எழுத்து இலக்கிய அமைப்பு அறிமுகமானது. 

இன்றைய காலகட்டத்தில் வாசகர்கள் சிறுகதை, நாவல், கட்டுரை என்று நகர்ந்துவிட்டார்கள். மறுபக்கம் சமூகவலைதளங்கள், சினிமா என்று பொழுதுபோக்கும் அம்சங்களின் ஆக்கிரமிப்பில் கவிதை வாசிப்பும் அதன் பகிர்தலும் தேக்கநிலையை அடைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இப்படி இருக்க `நொதுமலர்க்கன்னி' நூல் வெளியாகி ஆறுமாத காலமாகிறது. நூல் குறித்த பார்வை, வரவேற்பு எப்படி இருக்கிறது?

கவிதை மீதான வாசிப்பும் பகிர்வும் ரொம்ப காலமாகவே குறைவாகத்தான் உள்ளது. அதற்கான வாசகர்களும் குறைவாகத்தான் இருப்பாங்க. பிற இலக்கிய வடிவங்களுக்கு இருக்கும் வாசகர்கள் கவிதைக்கு இல்லை என்பது உண்மைதான். இதைத் துய்க்கிறதுக்கான வழி என்னவென்று தெரியவில்லை. கவிதைதான் அணுக்கமாகவும் உள்ளார்ந்து செயல்படக்கூடியதாகவும் உள்ள ஒரு வடிவம். அதை நெருங்கிப்போவதற்கு வாசகர்களுக்கு ஏதோ குறை இருப்பதாக நினைக்கிறேன். நாவல், சிறுகதை என்றால் காட்சியோடு காட்சியாகக் கடந்துபோகிறார்கள். கவிதையோ, வாசிப்பை மல்லுக்கட்டிக்கொண்டு போகுற நிலையைத்தான் உருவாக்கியிருக்கு. இந்தமாதிரியான சூழ்நிலையில்தான் நொதுமலர்க்கன்னி வெளியாகியிருக்கிறது. ஒரு நாவலையோ, ஒரு சிறுகதையையோ இந்நூலில் தரிசிக்கலாம். நெருங்கி வாசிக்கத் தொடங்கிவிட்டால், அந்தக் கதை மனநிலையை அடைந்துவிடுவார்கள். எல்லோரும் கதை அம்சம்கொண்ட கவிதைகளை எளிதில் அணுகிவாசிப்பார்கள். அப்படியான ஒரு தொகுப்பாகத்தான் நொதுமலர்க்கன்னி இருக்கும். நிறைய பேர் வாசித்து ரொம்ப நல்லா வந்திருக்கிறது என்று சொன்னார்கள். இந்திரன், யவனிகா ஶ்ரீராம், ஆதவன் தீட்சண்யா,அறிவுமதி, யாழன் ஆதி, அனார், தேன்மொழி தாஸ், கலைச்செல்வி, திண்டுக்கல் தமிழ்ப் பித்தன், பச்சோந்தி, தமிழ்ப் பிரபா, நடிகர் பொன்வண்ணன், அஜயன் பாலா,அய்யப்ப மாதவன், அகரமுதல்வன், ஷக்தி எனப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். மேலும், கும்பகோணம் தாழ்வாரம், பொள்ளாச்சி இலக்கிய வட்டம், திண்டுக்கல் வெற்றிமொழி இலக்கியக் கூடல் ஆகிய இலக்கிய அமைப்புகள் நொதுமலர்க்கன்னி நூல் அறிமுகம் செய்துள்ளார்கள்.

 

மெளனன்


முதல் நான்கு தொகுப்புகளைவிட நொதுமலர்க்கன்னியில் ஒரு தீவிர மொழிநடையையும், கவிச்செழுமையையும் அடைந்திருக்கிறீர்கள். இந்தப் பயணத்தோடு உங்கள் வாசிப்பு அனுபவத்தைச் சொல்லுங்கள். மேலும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள்? 

சென்னைக்குச் சென்றால் எழுத்தாளர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன். எனவே, சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு கடந்த மூன்று நான்கு வருடங்களாக வரத்தொடங்கினேன். அப்படி வரும் நேரங்களில்தான் காலச்சுவடு, உயிர்மை போன்ற அரங்குகளின் முன்பு நிறைய எழுத்தாளர்களைக் கண்டேன். எங்கு எழுத்தாளர்கள் இருந்தார்களோ, எங்கு கூட்டம் அதிகமாக இருந்ததோ அங்கேதான் ஏதோ வாசிப்பின் ரகசியம் இருப்பதாக நினைத்தேன். பிறகு ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், அரசியல், விவாதம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பன்முகத்தன்மையோடு ஓரளவுக்குக் கணிசமாக எல்லாத்தையும் வாசிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலகட்டங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்கள் என்னை ரொம்ப பாதித்தன. இளங்கலை படிக்கையில் வைரமுத்து எழுத்து எப்படி என்னை ஆட்கொண்டதோ, அதேபோல் தீவிர இலக்கியத்துக்குள் வருவதற்கு எஸ்.ராமகிருஷ்ணன்தான் எனக்கு ஆதர்சமாக இருந்தார்.

ஜெயமோகனின் சில நூல்களை மட்டுமே வாசித்தாலும் ஏழாம் உலகம், வெள்ளை யானை தீவிர மனநிலையை ஏற்படுத்தியது.பிறகு நண்பர்கள் மூலமா நிறைய பேரின் எழுத்துகள் அறிமுகமாகின. பெருமாள் முருகன், இமயம், பிரேம் ரமேஷ் என மனநிலைக்குத் தக்கவாறு நிறைய படிச்சிருக்கேன். கோணங்கியின் பாழி எனக்குப் புரியவில்லையென்றாலும் அவரின் மதினிமார்களின் கதை ரொம்பப் பிடிக்கும். மூத்த எழுத்தாளர்களான தேவதேவன், வண்ணநிலவன், வண்ணதாசன், முதற்கொண்டு இப்போது என் சமகால எழுத்தாளர்களான வெய்யில், நரன், இளங்கோ கிருஷ்ணன், கதிர்பாரதி எழுத்துகளையெல்லாம் படிச்சிட்டு வருகிறேன். 

நவீனத் தமிழ்க்கவிதையில் நிலம் என்பது பெரும்பாலும் அந்நிய நிலமாக இருக்கிறது. நிலம் என்று பேசுபவர்களும் அவர்களுடைய நிலத்திலிருந்து அந்நியப்பட்டு இருக்கிறாங்க. நீங்களும் நிலத்தைப் பற்றி எழுதியிருக்கீங்க. உங்களுக்கும் நிலத்துக்குமான உறவைப் பற்றிச் சொல்லுங்க?

என் கால்படாமல் அல்லது என் மேல் படாத மண்ணை ஒருபோதும் என்னால் எழுத முடியாது. களிமண்ணா, செம்மண்ணா, கரிசல் புழுதியா எதுவாக இருந்தாலும் என்மேல் பட்டு இருக்கணும். நான் அதன்மேல் நடந்திருக்கணும். அப்பத்தான் அதன் ஈரமும், சூடும், குழைவுத்தன்மையும் என்மீது இருக்கும். அதன் மீது நடந்திருக்கேன், புரண்டிருக்கேன். எனவே, இதைப் பற்றி எழுதாமல் எனக்குத் தெரியாத மண்ணைக் கற்பனையாலும் எழுதமுடியாது. என் படைப்பில் காட்டும் நிலம், நிறம், பொழுது, தாவரங்கள், பூச்சிகள், புழுக்கள் என அனைத்தையும் பார்த்திருக்கேன். பழகித் தொட்டுப் பார்த்திருக்கேன்.

ஏதோ ஒரு வகையில் அதனுடன் அருகில் இருந்திருக்கேன். நிலம் எனக்கு அதிகார அமைப்பு கிடையாது. அது ஓர் உணர்வு. நான் நிலத்துக்கு எதிரே நின்று ஏவுகிற ஆள் கிடையாது. நிலத்தில் இறங்கி சேற்றைப் பூசிக்கொண்டு வேலைசெய்பவன். அந்தச் சேற்று நிலத்திலிருந்துதான் என் தாத்தா பாட்டி வந்தார்கள். என் அப்பா அம்மா வந்தார்கள். இப்போது நான் வந்திருக்கேன். சேறும் சகதியுமா இருக்கும் நீரில் காலை நீட்டி உக்கார்ந்திருப்பேன். என் நண்பர்கள் பின்னாலிருந்து தள்ளுவார்கள். சேற்றோடு கரைசேருகையில் என் கவட்டுக் கிடையில் உள்ள சேற்றில் மீன்கள் பிடித்திருக்கோம். மரம் ஏறத் தெரியா வயதில் காற்றில் விழும் நாவல் பழத்துக்காகக் காத்துக்கிடப்பது. நண்டு பிடிக்கப் போகையில், அதன் பொந்துக்குள் பாம்பிருக்குமோ என்கிற பயத்தில் வேற ஒருவன் கைவிடும்வரை காத்திருப்பது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். ரத்தமும் சதையுமாக என்று சொல்வார்கள் இல்லையா, அப்படி மண்ணும் மக்களுமாக வாழ்வதுதான் நம்ம வாழ்க்கை.மெளனன்

 

எழுத்தாளன் என்றாலே குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் துண்டித்துக்கொண்டு வாழும் சூழல் உள்ளது. உங்கள் படைப்பு மனதுக்கு குடும்பம் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது. நீங்கள் குடும்பத்துக்குப் பொறுப்புள்ளவராக இருக்கிறீங்களா?

பொதுவாக இலக்கியம் கலைத்துறை என்று வந்துவிட்டாலே, ஒரு ஏகாந்த மனநிலை ஒரு நாடோடி மனநிலை தானாக வந்துவிடும்.  குடும்பத்தையோ அல்லது உறவுகளையோ துண்டித்துக்கொள்வது கண்டிப்பாக நடக்கும். அப்படி நடந்தால்தான் உள்ளார்ந்து ஆத்மார்த்தமாகச் செயல்பட முடியும். அப்பதான் புதிய உலகத்தை சமூகத்துக்குக் காட்டமுடியும். சாமனியருக்கும் உங்களுக்குமான வேறுபாடு நீங்க துண்டிச்சு நிக்கிறதுலதான் தெரியும். 

நீங்கள் குடும்பத்தைத் துண்டிச்சாலும் குடும்பம் உங்களோடுதான் இருக்கும்; நீங்களும் குடும்பத்தோடுதான் இருக்க முடியும். திடீர்னு யாரோ ஒரு எழுத்தாளரைப் பார்க்கப் போறீங்க அல்லது நண்பரைப் பார்க்கப் போறீங்கன்னா போயிடணும். குடும்பத்தைப் பற்றி இறுக்கமான மனநிலை இருந்தால் உங்களால் எழுதமுடியாது. அப்படி இறுக்கமான மனநிலையில் எழுதும்படைப்பும் இறுக்கமானதாக இருக்குமே தவிர சுதந்திர மனநிலைகொண்டதாக இருக்க முடியாது. உறவுகளையெல்லாம் பிய்த்துக்கொண்டு வரச்சொல்லவில்லை. ஆனால், அங்கிருந்து தாண்ட முயற்சி பண்ணணும்.

என்னுடைய ஏகாந்த மனநிலையை, நாடோடித்தன்மையை வீட்டில் அனைவரும் விரும்புகிறாங்க. இதன்மூலமா நான் அதிகமாகச் சம்பாதிப்பேன் என்று நினைக்கிறாங்க. அப்படி ஒன்று இல்லை என்பதை நான் உறுதிப்படுத்திவிடுவேன். கலைஞனாகவே எங்கெங்கும் சுற்றியலைவேன். திரும்பி வரும்போது வெறுங்கையோடுதான் வருவேன். மற்றபடி வீட்டைப் பாதுகாக்க அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய நல்ல வேலையில்தான் இருக்கேன்.

அடுத்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

தற்போது ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். கதை சொல்லியான என் தாத்தாவைப் பற்றியதாக இருக்கும். நாடோடியாக அலைந்து திரிந்ததை, கதை சொல்லிய வாழ்க்கைமுறையை, நீர் சார்ந்த அவரின் வாழ்க்கை முறையும் நீருக்குப் பின்னாடி இருக்கும் அரசியல் இதைப் பற்றியெல்லாம் பேசுவதாக நாவல் இருக்கும்.