`ஆம்புலன்ஸ் கிடைக்கல..!’ - நிறைமாத கர்ப்பிணியை சுமந்து சென்று காப்பாற்றிய போலீஸ் அதிகாரி #HatsOff | agra policeman carries pregnant woman in arms

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (15/09/2018)

கடைசி தொடர்பு:18:06 (15/09/2018)

`ஆம்புலன்ஸ் கிடைக்கல..!’ - நிறைமாத கர்ப்பிணியை சுமந்து சென்று காப்பாற்றிய போலீஸ் அதிகாரி #HatsOff

பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த ரயில்வே போலீஸுக்கு பாராட்டுகள் குவிகின்றன.  

போலீஸ் அதிகாரி
 

ஆக்ராவில் உள்ள மதுரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நேற்று (14-09-2018) மதியம் வழக்கத்தைவிடக் கூட்டம் அலைமோதியது. ரயில்வே போலீஸ் அதிகாரியான சோனு குமார் ரஜோரா மேற்பார்வை பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர்  ரயிலில் இருந்து இறங்கி நடக்க முடியாமல் அழுதபடி நடந்து வந்தார். அந்தப் பெண்ணின் கணவர் பைகளை சுமந்து கொண்டு மனைவியையும் தாங்கியபடி நடந்து வந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த சோனு குமார் சற்றும் யோசிக்காமல் அந்தப் பெண் நடந்து வந்துகொண்டிருந்த திசையை நோக்கி ஓடினார். அந்தப் பெண்ணின் கணவர் சோனுவிடம், ‘ஐயா ரயிலில் வந்துகொண்டிருந்தபோது என் மனைவிக்கு பிரசவ வலி வந்துடுச்சு. நாங்க இந்த இடத்துக்கு புதுசு. தயவு செஞ்சு உதவி பண்ணுங்க’ என்றார்.

போலீஸ் அதிகாரி
 

சோனு உடனே வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தார். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார்.  அந்தப் பெண் சற்று நேரத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலம் என்று மருத்துவர்கள் சோனுவிடம் சொன்ன பின்புதான் அந்த இடத்தில் இருந்து சோனு கிளம்பினார்.

ரயில் நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணை சோனு தூக்கிக்கொண்டு நடந்து சென்ற காட்சியை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, மீடியாக்களின் காதுகளுக்கு இந்த விவகாரம் எட்டியது. உள்ளூர் நிருபர்கள் சோனுவை நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பது குறித்து விவரிக்கச் சொன்னார்கள்.  

`நேற்று நடக்க முடியாமல் அழுதுகொண்டே கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடந்து வந்தார். அவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியவந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன் ஸ்டெச்சர் எதுவும் இல்லை. ஆம்புலன்ஸுக்கு போனில் அழைத்துப் பார்த்தேன். லைன் கிடைக்கவில்லை. நேரத்தை வீணடிக்க வேணாம் என்று எண்ணினேன். எனவே, ரயில் நிலையம் அருகில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். சற்று நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்புதான் அவர்கள் யார், என்ன என்பதைப் பற்றி அந்தப் பெண்ணின் கணவரிடம் விசாரித்தேன். அந்தப் பெண்ணின் பெயர் பாவ்னா. அவரின் கணவர் பெயர் மகேஷ். அவர்கள் இருவரும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்திலிருந்து ஃபரிதாபாத்துக்கு ரயிலில்  பயணித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அடுத்ததாக வந்த மதுரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டனர். அதன் பின்புதான் நான் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தேன். இது என்னுடைய கடமை’ என்றார் சோனு. 

போலீஸ் அதிகாரி

 

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்த அந்த தம்பதியையும் நிருபர்கள் சென்று சந்தித்தனர். மகேஷ் நிருபர்களிடம் பேசுகையில்   ‘என் மனைவிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. எங்களின் இந்த மகிழ்ச்சிக்கு போலீஸ் அதிகாரி சோனு செய்த உதவிதான் காரணம். அவர் மட்டும் சரியான நேரத்தில் என் மனைவியை மருத்துவமனையில் சேர்க்காமல் போயிருந்தால் என்ன செய்திருப்போம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவருக்கு நாங்கள் நன்றிகூட தெரிவிக்க முடியவில்லை. என் மனைவியும், குழந்தையும் நலம் என்று மருத்துவர்கள் சொன்னதுமே அவர் மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டார்’ என்று தெரிவித்துள்ளனர் கண்ணீருடன்.  HatsOff சோனு குமார் ரஜோரா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க