டெல்லியில் கடத்தல் கும்பலை அடையாளம் காட்டிய சிறுமிகள்!

மாநிறத்தில் இருந்த அந்தக் குழந்தைகளை நிறமாகக் காண்பிப்பதற்காக, படிகாரம் போன்ற சில பொருள்களை தேய்த்துக்கொள்ள துன்புறுத்தப்பட்டிருப்பது வேதனையின் உச்சம்.

குழந்தைக் கடத்தலும், அதை சார்ந்த வியாபாரமும் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பும் குறைந்துகொண்டே வரும் தற்போதைய சூழலில் இரண்டு சிறுமிகள், டெல்லி ஜி.பி சாலையில் நடைபெற்றுவந்த பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

சிறுமிகள்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பெண் குழந்தைகளும், சில வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு, பாலியல் தொழிலைச் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து தப்பிவந்த அவர்களை, மனித வதை தடுப்புச் சட்டப் பிரிவின் அடிப்படையில் காவல்துறையினர் மீட்டெடுத்து டெல்லி பெண்கள் ஆணையத்திடம் (DWC) ஒப்படைத்தனர். 

இந்தத் தைரியமான சிறுமிகள், 181 என்ற பெண்கள் உதவி எண்ணுக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்கள். அந்தச் சிறுமிகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கே சென்று மீட்டிருக்கிறது, டெல்லி பெண்கள் ஆணையம். சிறுமிகள் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில், காம்லா சந்தைக் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. பிறகு, எண் 5211, ஜி.பி.சாலையில் உள்ள விடுதியில் காவல்துறை நடத்திய சோதனையில், அதன் உரிமையாளரான ரேஷ்மா கைது செய்யப்பட்டார். ரேஷ்மாவின் உதவியாளர் சைய்னா, பல காரணங்களைச் சொல்லி தப்ப முயன்றுள்ளார். அங்கு நடத்திய சோதனையில் அங்கிருந்த இரண்டு பெண்கள், வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி, கடத்திவந்து இந்தத் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், செய்யவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டியதால் செய்தோம் என்றும் கூறியுள்ளனர். இதுபோன்று மேலும் சில பெண்கள் வேறு இடங்களில் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

தப்பிவந்த அந்த இரண்டு சிறுமிகளும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிறத்தில் இருந்த அந்தக் குழந்தைகளை நிறமாகக் காண்பிப்பதற்காக, படிகாரம் போன்ற சில பொருள்களை தேய்த்துக்கொள்ள துன்புறுத்தப்பட்டிருப்பது வேதனையின் உச்சம். இதனால், அவர்களின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் உள்ளன. அங்கிருந்த பெண்களுக்கு போலி ஆதார் ஆவணங்களையும் ரேஷ்மா தயாரித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!