"குற்றமே நடைபெறாவிட்டால், ஐ.நா. பொதுவிசாரணைக்கு ராஜபக்சே அனுமதிக்காதது ஏன்?" - பழ.நெடுமாறன்

கிந்தா ராஜபக்‌சே ... இலங்கை முன்னாள் அதிபரான இவரின் பெயரைக் கேட்டாலே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு வெறுப்பும், எதிர்ப்புஉணர்வும் ஏற்படும். ஏனென்றால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, அதாவது 2009-ம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமானவர் ராஜபக்‌சே . ஆம். அப்போது இலங்கை அதிபராக இருந்தவர் அவர். இலங்கையில் நடத்தப்பட்ட அந்த கொடூரமானப் போருக்கு இந்திய அரசின் ஆயுத உதவி மற்றும் உறுதுணையும், மத்திய அரசில் அங்கம் வகித்த அப்போதைய தமிழக அரசின் ஆதரவும் இருந்தது எனக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. தமிழர்கள் யாரும், அவ்வளவு எளிதில் அந்தப் போரை மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் போரின்போது, ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. சிறுமிகள், பெண்கள் என்றும் பாராமல் கொத்துக்கொத்தாக அங்குள்ள தமிழர்களின் வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டன. அது தவிர, ஆயிரக்கணக்கானோர் மாயமான நிகழ்வும் நடந்தேறியது.

சுமார் 30 ஆண்டுக்காலமாகத் தங்களின் உரிமைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை, அடியோடு ஒழித்த 'பெருமை' ராஜபக்‌சே வைச் சேரும். இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது, இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது நினைவிருக்கலாம். 

அப்படிப்பட்ட ஒரு போரை நடத்திமுடித்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌சே , கடந்த சில தினங்களுக்கு முன், பி.ஜே.பி. மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி.  தலைமையில் செயல்படும் 'விராட் இந்துஸ்தான் சங்கம்' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தார். மேலும், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் ராஜபக்‌சே சந்தித்துப் பேசினார். அவருடன் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜபக்‌சேவின் மகனுமான நமல் ராஜபக்‌சேவும் வந்திருந்தனர். இந்தச் சந்திப்புகளின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றி தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.  

மன்மோகன் சிங் - ராஜபக்சே - ராகுல் காந்தி

நிகழ்ச்சியின்போது பேசிய ராஜபக்‌சே , " 'இந்தியா - இலங்கை உறவுகள்' என்ற தலைப்பில்உரையாற்றினார். அப்போது, இலங்கை இறுதிக்கட்டப் போர் பற்றிக் குறிப்பிட்ட ராஜபக்‌சே , இந்தியாவுடன் நட்புறவு நிலவுகிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான வெளியுறவுக் கொள்கை மிகப்பெரிய தூண் போன்ற உறுதியுடையது" என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, இந்தியா தெரிவித்த கவலை, "மிகவும் உணர்வுப்பூர்வமானது" என்று தெரிவித்த அவர், "அப்போது இந்திய அரசுடனும், இதர அண்டை நாடுகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார். இதற்கான இலங்கை மற்றும் அண்டை நாடுகளின் உயர் அதிகாரிகளைக் கொண்டு குழு அமைக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். அந்தக் குழுவில் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் சிவசங்கர் மேனன், அப்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் இந்தியத் தரப்பில் இடம்பெற்றிருந்ததாக ராஜபக்‌சே தெரிவித்தார். இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் தொடர்பாக அதிகாரிகள் குழு அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். "இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார, சமூகரீதியிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு போரின்போது செயல்பட்டதைப் போன்று ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்" என்றார் அவர். 

"இலங்கையில் 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் என்பது, தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும், ராணுவ நடவடிக்கை அப்பாவி மக்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை" என்றும் ராஜபக்‌சே தெரிவித்தார். 

விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற ஒன்று இருந்ததற்கான சுவடே தெரியாமல் அழித்த பின்னர், தற்போது ஓர் இனத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல என்றும், தமிழர்களுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை தமது தலைமையிலான இலங்கை அரசு நடத்தவில்லை என்றும் தெரிவித்திருப்பது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறுதிக்கட்டப் போரின்போது, போர்க்குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் ராஜபக்‌சே தமது உரையில் குறிப்பிட்டார்.

இதுகுறித்து உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனிடம் பேசினோம். "இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்தது குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது. அதுகுறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை, நேரடியாக இலங்கைக்குப் போய், நிலைமையைப் பார்த்துவிட்டு வந்து, அவர் வெளியிட்ட அறிக்கையிலும் அதைத்தான் வலியுறுத்தியிருக்கிறார். 'பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும். அப்பட்டமான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என்று சொன்னபோது, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை விசாரிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று இதே ராஜபக்‌சே சொல்லிவிட்டார். இப்போது 'போர்க்குற்றமே நடக்கவில்லை' என்று சொன்னால் எப்படி? ஐ.நா. மனித உரிமை ஆணையம் என்பது ஒரு தனிநபர் அல்ல. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கின்றன. அதை மீறிப் போர்க்குற்றம் நடக்கவில்லை என்று சொன்னால், மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் கமிஷனை அனுமதிக்க மறுப்பது ஏன்? போர்க்குற்றம் நடக்கவில்லை என்றால், தாராளமாக விசாரணை நடத்துங்கள் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.

பழ.நெடுமாறன்

மேலும், பிரிட்டிஷ் காமன்வெல்த் பிரதமர்களின் மாநாடு கொழும்புவில் நடைபெற்றபோது, பிரிட்டன் பிரதமர் அங்குச் சென்றார். அவர் நேரடியாக யாழ்ப்பாணம் சென்றபோது, ஆயிரக்கணக்கான தாய்மார்கள் கூடி, தங்களின் கணவரைக் காணோம்; மகன்களைக் காணோம் என்று கூறி, புகைப்படங்களைக் காட்டி, புகார் செய்தார்கள். 'கைது செய்து கொண்டுபோகப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதே சொல்ல மறுக்கிறார்கள்' என்று தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் கொழும்பு திரும்பிய பின், ராஜபக்‌சேவை அவர்  கண்டித்தார். 'உடனடியாக அவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்' என்றார். லண்டனுக்குத் திரும்பிச் சென்றபிறகும் கூட, பிரிட்டிஷ் பிரதமர் பகிரங்கமாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிப் பேசினார். 'காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலை இலங்கை அரசு வெளியிட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.  

டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் போன்ற பொது அமைப்புகள் இதுகுறித்து விசாரணை நடத்தின. வெளிநாடுகளில் வாழக்கூடிய ஈழத்தமிழர்கள், அந்தப் போரின்போது உயிர் தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் எல்லாம் மேற்கண்ட தீர்ப்பாயங்களில் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களை எல்லாம் அளித்திருக்கிறார்கள். அதையொட்டி, தீர்ப்பாயங்கள் அளித்த தீர்ப்பிலும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இரண்டு தீர்ப்பாயங்களும் சொல்லியுள்ளன. டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ராஜேந்திர சச்சாரும் அங்கம் வகித்தார். இரண்டு நீதிபதிகளில் அவரும் ஒருவர். இதையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று அவரும் சேர்ந்துதான் சொல்லியிருக்கிறார். இப்படியெல்லாம் சொன்னபிற்பாடும் ராஜபக்‌சே , போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மழுப்பல் போன்றதாகும்" என்றார் மிகத்தெளிவாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!