ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்ட சமூக ஆர்வலர் - ரூ.1.49 லட்சம் செலுத்த சொன்ன மாநகராட்சி! | activist filed an application under the rti municipal corporation has asked him to pay rs 1.49 lakh

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (16/09/2018)

கடைசி தொடர்பு:17:27 (16/09/2018)

ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்ட சமூக ஆர்வலர் - ரூ.1.49 லட்சம் செலுத்த சொன்ன மாநகராட்சி!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நகராட்சியிடம் கேள்வி கேட்ட சமூக ஆர்வலர்க்குக் காத்திருந்தது அதிர்ச்சி. 

ஆர்டிஐ

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் கவுனியா. சமூக ஆர்வலரான இவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஆர்டிஐ மூலம் கேட்டறிந்து பரபரப்பைக் கிளப்பி வருவார். இதேபோல், சமீபத்தில் ஹலட்வனி நகராட்சியில் வரி செலுத்த தவறியவர்கள் யார், அப்படித் தவறியவர்கள் மீது நகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறைத்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக ஆர்டிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியில் விண்ணப்பித்திருந்தார். அதோடு, நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாதவர்கள் விவரங்களைக் கேட்டு ஆர்டிஐ-யில் விண்ணப்பித்தார். 

இதன் பின்னர், பதிலுக்காகக் காத்திருந்த ஹேமந்த் கவுனியாவுக்கு அதிர்ச்சியும் கூடவே காத்திருந்தது. நகராட்சி நிர்வாகம் கடந்த 9-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் ரூ.1,47,938 செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ``நீங்கள் விண்ணப்பித்திருந்த தகவலை பெற வேண்டும் என்றால் சுமார், 73,969 பக்கங்கள் கொண்ட நகலை அச்சடிக்க வேண்டும். இதற்கு, ரூ.1,47,938 செலவாகும். ஒரு நகலுக்கு ரூ.2 எனக் கணக்கிட்டால் இவ்வளவு செலவாகும். அதுவும், 135 ஃபுல் சைஸ் பேப்பரில் அச்சடிக்க வேண்டும். அதனால், உயர்தரமாக அச்சடிக்க ஆகும் செலவும் தோராயமாக ரூ.1,49,288 கணக்கிடப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஹேமந்த் கவுனியா கூறுகையில், `அளவுக்கு அதிகமான தொகையை நகராட்சி நிர்வாகம் தன்னிடம் கேட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தான் மீண்டும் இதுபோன்ற கேள்விகளை தொடுக்கக்கூடாது என்று அவர்கள் வேண்டுமென்றே இதனை செய்திருக்கின்றனர்' என்றார் ஆதங்கத்துடன்.