`பிரனயைதான் அழிக்க முடியும்; காதலை அழிக்க முடியாது' - கண்கலங்க வைத்த இறுதி ஊர்வலம் #JusticeForPranay | thousands youngster attend pranay funeral

வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (17/09/2018)

கடைசி தொடர்பு:12:44 (18/09/2018)

`பிரனயைதான் அழிக்க முடியும்; காதலை அழிக்க முடியாது' - கண்கலங்க வைத்த இறுதி ஊர்வலம் #JusticeForPranay

இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் நடைபெற்ற ஆணவக் கொலையில் இறந்த பிரனயின் இறுதி ஊர்வலத்தில் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

அம்ருதா - பிரனய்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மாருதிராவ் தொடர்ந்து பிரனயின் பெற்றோருடன் பிரச்னையில் ஈடுபட்டு வந்தார். 

இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 14-ம் தேதி மதியம் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து வெளியில் வரும்போது மருத்துவமனை வளாகத்தில் அவர்களின் பின்னால் நடந்து வந்த மர்ம நபர் பிரனய்யை அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடிவிட்டார். பிரனய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல மூலைகளிலிருந்தும் அம்ருதாவுக்கு ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன. தற்போது பிரனயைக் கொல்வதற்கு அம்ருதாவின் அப்பா 1 கோடி ரூபாய் கூலிப்படைக்கு தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அம்ருதாவின் சிசுவை அழிப்பதற்கு மருத்துவருக்கும் பணம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 

PhotoCredits : Twitter/@kartheek777

இந்தநிலையில் நேற்று மிர்யலாகுடாவில் பிரனயின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தாங்களாக முன்வந்து கலந்துகொண்டனர். ‘பிரனய் அமர் ரஹே’, பிரனயை அழிக்க முடியும், காதலை அழிக்க முடியாது (பிரனய் என்றால் இந்தியில் காதல் என்று பொருள்) என்ற பதாகைகளுடன் ‘ஜெய் பீம்’ முழக்கங்கள் மிர்யலாகுடா பகுதியின் மூலை முடுக்குகளிலும் ஒலித்தன. பிரனய் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பகுதியில் அம்ருத்தா அமர்ந்திருந்தது அனைவரது மனதையும் கலங்கவைத்தது. ‘எத்தனை முறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் இன்னும் எவ்வளவு இளைஞர்கள் கொல்லப்படுவார்கள்’ என்ற பாடலை இறுதிச்சடங்கின்போது ஓர் இளைஞர் பாடினார். பட்டியலின மக்களின் கோபமும் அவர்களின் வருத்தமும் அந்த இளைஞரின் குரலில் எதிரொலித்தது. பிரனய் வீட்டில் தொடங்கிய இறுதி ஊர்வலம் மயானத்தில் சென்று முடியும் வரை அனைத்துக் காட்சிகளையும் அங்கிருந்த இளைஞர்கள் தங்களின் முகநூல் பக்கத்தில், `சாதியின் அசிங்கமான முகத்தை இந்த உலகம் பார்க்கட்டும்' என்ற கேப்சனுடன் நேரடி ஒளிபரப்பு செய்தனர். பிறகு, பிரனயின் உடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

PhotoCredits : Twitter/@sakshinews

“இனி அம்ருதா எங்கள் மகள். அவளை எதற்காகவும் நாங்கள் விட்டுத்தரமாட்டோம். அம்ருதாவும் அவளின் குழந்தையும் இனி எங்களுடன் தான் இருப்பார்கள். அவளுடன் இருந்து பிரனய் கொலைக்கு எதிராக நாங்கள் சட்டபூர்வமாகப் போராடுவோம். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை எங்களது சட்டப்போராட்டம் தொடரும்” எனப் பிரனயின் தாயார் தெரிவித்துள்ளார். இன்று பிரனயின் வீட்டில் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் உள்ளனர். ஆனால், பிரனய் மட்டும் இல்லை. மிர்யலாகுடா பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.