வட்நகர் டீக்கடை முதல் டிஜிட்டல் இந்தியா வரை... மோடியும் வளர்ச்சியும்! | narendra modi celebrating his 68th birthday

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (17/09/2018)

கடைசி தொடர்பு:16:54 (17/09/2018)

வட்நகர் டீக்கடை முதல் டிஜிட்டல் இந்தியா வரை... மோடியும் வளர்ச்சியும்!

வட்நகர் டீக்கடை முதல் டிஜிட்டல் இந்தியா வரை... மோடியும் வளர்ச்சியும்!

டீக்கடை வைத்திருந்தவர் பிரதமரானார், வளர்ச்சிதான் பிரதானம் என்றார். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 60 மாதங்களில் பி.ஜே.பி செய்யும் என்றார். பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி, இன்று தனது 68 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிரதமரான பின் அவர் கொண்டாடும் 5 வது பிறந்தநாள் இது. கடந்த நான்கு ஆண்டுகளில் தனது பிறந்தநாளன்று பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதேபோல இந்த ஆண்டும் 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசியில் 5000 குழந்தைகளுடன் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலின்போது `வளர்ச்சி ஒன்றே தன் ஆட்சியின் இலக்கு’ என்பது மோடியின் தாரக மந்திரமாக இருந்தது. அதற்கேற்ப, `மேக் இன் இந்தியா’, `தூய்மை இந்தியா’, `டிஜிட்டல் இந்தியா’ எனத் திட்டங்களை வரிசையாக அறிவித்தார். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மோடியின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். அந்த வளர்ச்சிகளை அவர் பிறந்த நாளன்று தொகுத்துப் பார்க்கலாம்...

மோடி

ஜி.டி.பி

5 சதவிகிதத்துக்கும் குறைவாகச் சென்ற ஜி.டி.பி.யை 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாற்றியது மோடி அரசு.

நிதிப்பற்றாக்குறை

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 7.8 சதவிகிதமாக இருந்த நிதிப்பற்றாக்குறை, மோடி பதவியேற்ற முதல் வருடத்தில் 4.9 சதவிகிதமாகக் குறைந்தது. தற்போது, 3.2 சதவிகிதம் என்ற அளவுக்கு அது குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வங்கிக் கடன்

ஒரு நாட்டின் வளர்ச்சியை வெறும் திட்டங்கள் மூலம் மட்டுமல்ல, கடன் கொடுக்கும் திறனை வைத்தும் கணக்கிட முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கிகள் தரும் கடன் 10.32 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. 

மின்சாரத் தட்டுப்பாடு

`உதய் மின்திட்டம்’ மூலம், மோடி அரசு மின்சாரத் தட்டுப்பாட்டைப் பெருமளவு குறைத்துள்ளது. மின்இழப்பு மூலமாக 2016-17ல் மட்டும் 51,340 கோடி ரூபாய் இந்தியாவில் இழப்பு ஏற்பட்டிருந்தது. உதய் மின் திட்டத்தின் கீழ் 40,295 கோடியாக இது குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21% மின்இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 

`ஜன் தன்’ திட்டம் 

இந்தத் திட்டம் மூலம் இந்தியாவில் 31 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு 81,000 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு உள்ளது என்ற நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

போக்குவரத்துத் துறை

10 உள்நாட்டு நீர்வழிப் போக்கு வரத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 45 கி.மீ அளவுக்குப் புதிய சாலைகள் போடப்படுகின்றன. 12 துறைமுகங்கள் மூலம் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 19,000 கோடி ரூபாய் லாபம் அதிகரித்துள்ளது.

மோடி

அந்நிய முதலீடுகள்

மோடி பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன. 

2013-14 - 36.05 பில்லியன் டாலர்

2014-15 - 45.15 பில்லியன் டாலர்

2015-16 - 55.6 பில்லியன் டாலர்

2016-17 - 60.08 பில்லியன் டாலர்

18,000 கிராமங்களுக்கு மின்சாரம், ஆதார் மூலம் 3.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் போலி எனக் கண்டறியப்பட்டது, ஜி.எஸ்.டி மூலம் மாநிலங்களுக்கான வரி வருவாய் அதிகரிப்பு என்று அவர் அறிவித்த இதர திட்டங்கள் சிலவற்றின் மூலம் நன்மை தீமைகள் சமமாகவே நடைபெற்றுள்ளன. 

மோடி பிறந்தநாள்

இந்தியாவுக்கு வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றை அறிவித்திருக்கிறார் மோடி. ஆனால், கடந்த சில மாதங்களாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் ஆட்சியில் வாராக் கடன்களின் விளைவாக, செயற்படாத சொத்துகளின் மதிப்பு 2.83 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலகநாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டிலிருந்து அதிகளவில் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது. வளர்ச்சிகளுக்கு இடையே இதுபோன்ற மிகப்பெரிய சருக்கல்களையும் சந்தித்து வருகிறது மத்திய அரசு. இந்தச் சருக்கல்களை எல்லாம் விரைந்து சரி செய்யுங்கள் மோடி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்