வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (20/09/2018)

கடைசி தொடர்பு:10:03 (20/09/2018)

'என் மகளை ஒருதடவ பாக்கணும்; காட்டுப்பா'- நம்பிய காதலன்; வெறிச்செயலில் காதலியின் தந்தை

அம்ருதாவின் கணவர் பிரனய் ஆணவக் கொலை செய்யப்பட்டு ஒருவாரம் கூட ஆகாத நிலையில் தற்போது மீண்டும் ஆணவக் கொலை முயற்சி தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்த அம்ருதா பட்டியலினத்தைச் சேர்ந்த பிரனய் குமார் என்பவரைக் காதலித்து கரம்பிடித்தார். பட்டியலினத்தைச் சேர்ந்த பிரனய்யை திருமணம் செய்தது அம்ருதாவின் தந்தை மாருதிராவுக்குப் பிடிக்கவில்லை. இந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருந்த அம்ருதாவும் பிரனய்யும் கடந்த 14-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, மர்ம நபர் ஒருவர், பிரனய்யை வெட்டிக் கொலைசெய்தார். சிசிடிவி-யில் பதிவான இந்தக் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்ருதாவின் தந்தை மாருதிராவ் உட்பட இந்த ஆணவக் கொலையில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், அதே தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்தின் சனத் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் - மாதவி. காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த வாரம் கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். சந்தீப் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாதவியின் தந்தை மனோகர் சாரிக்குத் திருமணத்தில் உடன்பாடில்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால், எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணி அளவில் சந்தீப்பை தொடர்புகொண்ட மனோகர் சாரி, ``மகளைப் பிரிந்திருப்பது கவலையளிக்கிறது. இதனால் மாதவியை கூப்பிட்டுவந்து தன்னிடம் ஒருமுறை காண்பியுங்கள்" எனக் கூறியுள்ளார். இதை நம்பி சந்தீப், மாதவி இருவரும் அவர் சொன்ன இடத்துக்கு வந்து பைக்கில் காத்திருந்தனர். அப்போது, பின்னால் பைக்கில் வந்து நின்ற மனோகர் சாரி, பேக்கில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முதலில் சந்தீப்பை வெட்டினார். 

இதை மாதவி தடுக்கவே அவரையும் சரமாரியாக வெட்டினார். அருகிலிருந்தவர்களில் ஒருவர் மனோகரை வெட்ட விடாமல் தடுத்தார். எனினும் தொடர்ந்து அவர்களை அரிவாளால் வெட்டியுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த இருவரும் தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாதவிக்கு கை மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களிலும், சந்தீப்புக்கு கழுத்து பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க