வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (24/09/2018)

கடைசி தொடர்பு:12:49 (04/10/2018)

கேரளாவில் மீண்டும் யெல்லோ அலர்ட்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளா

நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போனது. ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 488 பேர் உயிரிழந்தனர். தற்போதுதான் மெள்ள மெள்ள வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆரம்பித்துள்ளது கேரளா. இந்நிலையில் கேரளாவின் ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் மிகக் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களான பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, பாலக்காடு, திருச்சூர் ஆகியவற்றுக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் வெள்ளத்துக்கான முன்னேற்பாடு எச்சரிக்கையாக மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்படும். இதன்மூலம் அனைத்து வகையான உதவிகளும் தயார் நிலையில் வைக்கப்படும். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை 25-ம் தேதி பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் இதேபோல் 26-ம் தேதி பாலக்காடு, இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழை முன்னேற்பாடாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களில் 64.4 மி.மீ முதல் 124.4மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலப் பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெருவெள்ளம் வடிந்து ஒரு மாதம்கூட பூர்த்தியாகாத நிலையில் கேரளாவின் ஆறுகளும் கிணறுகளும் வற்றிக்கொண்டிருக்கும் அவலம் முடிவதற்குள் அடுத்த கனமழை அந்த நிலப்பரப்பை இன்னும் ரணமாக்கக் காத்திருக்கிறது.