அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு! | Ayodhya Issue will not be referred to a larger bench says SC

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (27/09/2018)

கடைசி தொடர்பு:16:19 (27/09/2018)

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பான வழக்கு பல வருடங்களாக நடந்து வருவதுடன் அவ்வப்போது பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன.

உச்ச நீதிமன்றம்

இதேபோல் கடந்த 1994-ம் ஆண்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிகள் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன், நீதிபதி அப்துல் நாஸிர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பளிக்கப்பட்டது. 

அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் தீர்ப்புக்கு நீதிபதி அப்துல் நாஸிர் முரண்பட்டார். நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷன் தீர்ப்பில், ``94-ல் வழங்கப்பட்ட தீர்ப்பானது அந்தச் சமயத்தில் நிலவிய பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அனைத்து மதத்தின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். இரு மத வழிபாட்டை ஒப்பிட்டுப் பார்ப்பதை ஏற்க முடியாது. மசூதிக்குச் சென்று தொழுகை செய்தல் இஸ்லாமின் ஒருங்கிணைந்த முறையா என்பதை பெரிய அளவில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. மசூதி இஸ்லாம் மதத்துடன் தொடர்புடையதாக இடமா என்பது குறித்து தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும். விரைவில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அமர்வு அக்டோபர் 29-ம் தேதி முதல் இந்த வழக்கை விசாரிக்கும்' என்று கூறினர். 

இவர்களின் தீர்ப்புக்கு முரண்பட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி அப்துல் நாஸிர், ``ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் நடைமுறையை மதிக்க வேண்டும். ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் கொள்கையை 1994-ல் கருத்தில் கொள்ளவில்லை என்றே கூற முடியும். அத்தியாவசிய மத நடைமுறை என்ன என்பதை பெரிய அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க