இந்திய எல்லையில் வட்டமடித்த ஹெலிகாப்டர்! உளவு பார்த்ததா பாகிஸ்தான்? | A Pakistani helicopter violated Indian airspace in Poonch sector

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (01/10/2018)

கடைசி தொடர்பு:11:40 (01/10/2018)

இந்திய எல்லையில் வட்டமடித்த ஹெலிகாப்டர்! உளவு பார்த்ததா பாகிஸ்தான்?

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததால் பதற்றம் நிலவுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஹெலிகாப்டர்

இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கு ஒரு கிமீ முன்னதாக வரை மட்டுமே இரு நாட்டு விமானங்களும் பறக்க வேண்டும் என்பதுதான் இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள விதிமுறை. ஆனால், நேற்று நண்பகல் 12:15 மணியளவில் காஷ்மீர் எல்லைப் பகுதியான பூஞ்ச் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு வெள்ளை நிற ஹெலிகாப்டர் அத்துமீறி சிறிது நேரம் வட்டமடித்துள்ளது. அதைக் கண்டதும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து ராணுவ வீரர் ஹெலிகாப்டரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். குண்டு வெடிப்பு சத்தத்தை அடுத்து அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுள்ளது. இதை வீடியோ எடுத்து சோதனை செய்ததில் அது பாகிஸ்தான் நாட்டு ஹெலிகாப்டர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு பூஞ்ச் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி முதல்வர் ஃபரூக் ஹைதர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த, உளவு பார்க்கும் திட்டமாக இருக்கலாம் என சந்தேகித்துள்ள இந்திய ராணுவம், காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாகதான் நாடு முழுவதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் ஊடுருவல் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.