வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:14:59 (04/10/2018)

``யாரும் உதவ வரவில்லை என்பதை நம்பவே முடியல” - விபத்தில் பலியான ஜினீஷின் நண்பர் உருக்கம்! #KeralaRelief

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் வெள்ளத்தின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், தனது நண்பர்கள் 6 பேரை உடன் அழைத்துக்கொண்டு படகு மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டார் 24 வயதான ஜினீஷ் ஜிரோம் என்ற இளைஞர். அங்கு வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்ட ஜினீஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பலியானார். கடந்த சனிக்கிழமை அவர், தனது நண்பர் ஜகன் என்பவருடன் செங்கனூர் பகுதிக்குச் சென்றபொது, எதிரில் வந்த லாரி மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜகன் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஜினீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜினீஷ் ர்கனது நண்பர்களுடன்

இந்த நிலையில் ஜினீஷ் நண்பர், ஜகன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,  ``நான்தான் பைக்கை ஓட்டிச் சென்றேன். அந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டோம். ஜினீஷுக்கு இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது உதவிக்காக நாங்கள் கடும் வலியுடன் கூச்சலிட்டோம். ஆனால், அப்போது சாலையில் சென்ற யாரும் நிற்கவில்லை. ஆம்புலன்ஸ் வருவதற்கும் 30 நிமிடத்துக்கு மேல் ஆனது. வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உதவிய ஜினீஷுக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்பதை என்னால் நம்பமுடியவிலை. மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் ஜினீஷ். அந்தக் குணம்தான் அவரைக் கேரள வெள்ளத்தின்போது ஹீரோவாக ஆக்கியது” என்றார் வேதனையுடன். 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய ஜினீஷின் அம்மா செல்வி,  ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தேவை என்று சர்ச்சில் இருந்து அழைப்பு வந்ததும், தன்னுடைய 6 நண்பர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் ஜினீஷ். அவன் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவில்லை. ஜினீஷின் மரணம், சாலையில் விபத்தைப் பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் செல்லும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். நீங்கள் நிறுத்தாமல் செல்லும்போது ஒரு உயிரை சாக அனுமதிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார்.
 
கடந்த இரண்டு நாள்களாக ஜினீஷின் வீட்டுக்கு அவரால் காப்பாற்றப்பட்ட பலரும் வந்து ஆறுதல் கூறிச் செல்கின்றனர். வறுமையில் இருக்கும் ஜினீஷின் வீட்டில், அவர் டான்ஸ் பயிற்சி செய்ய சிறியதாய் ஒரு இடம் இருக்கிறதாம். கிரிக்கெட் போட்டியில் அவர் வாங்கிய சில கோப்பைகளும் அவரது வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில், உதவிய ஜினீஷுக்கு யாரும் உரிய நேரத்தில் உதவவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.