வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (04/10/2018)

கடைசி தொடர்பு:11:15 (04/10/2018)

``1,75,025 பேர், ஹஜ் பயணம்..!'' அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

``சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக  இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் மானியம் ஏதுமின்றி ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டின் (2018) ஹஜ் பயணத்துக்கான நடவடிக்கைகள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான (2019) ஹஜ் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் முறை'' என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

முக்தார் அப்பாஸ் நக்வி

 

2019-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் தொடர்பான ஏற்பாடுகளை நக்வி 3.10.2018 அன்று டெல்லியில் ஆய்வு செய்தார். சிறுபான்மையினர், வெளியுறவுத் துறை, விமானப்போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங்களின் மூத்த அலுவலர்கள், இந்திய ஹஜ் குழு, சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது, ஹஜ் பயணத்துக்கான மானியம் நீக்கப்பட்ட பின்பும், 2018 -ம் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல யாத்ரீகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மானியம் நீக்கப்பட்ட பின்பு, தரகர்களை ஒழித்து 100 சதவிகிதம் இணையதளம் மூலம் வெளிப்படையான முறையைக் கொண்டு வந்தது யாத்ரீகர்களுக்கு தேவையற்ற நிதிச் சுமையை அகற்றியுள்ளது. 2019-ம் ஆண்டின் ஹஜ் பயண யாத்ரீகர்களுக்கான ஹஜ் விண்ணப்பம் தொடர்பான நடவடிக்கைகள், தங்கும் இடம், போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் போன்ற பிரச்னைகள் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், ``2018-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. சுதந்திரத்துக்குப் பின் முதன்முறையாக இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் மானியம் ஏதுமின்றி ஹஜ் பயணம் மேற்கொண்டனர். 2019-ம் ஆண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் திட்டமிட்ட தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டோம். 2018-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு சவூதி அரேபியா அரசுக்கும் இந்தியாவில் உள்ள ஹஜ் பயணம் தொடர்பான முகமைகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க